தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்யும் முன்பு நவீன தொழில்நுட்பம் மூலம் பொதுமக்களின் கருத்தை கேட்டறிய உள்ளார் அக் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு.
ஆந்திரப்பிரதேசத்தில் ஹை-டெக் முதல்வர் என பெயரெடுத்தவர் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு. அவரது ஆட்சிக் காலத்தில் மாநிலத் தலைநகரான ஹைதராபாத்தில் தகவல் தொழில்நுட்ப புரட்சி ஏற்படுத்தினார். ஹைதராபாத்தை ஹை-டெக் சிட்டியாக மாற்றினார்.
வளர்ச்சிப் பணிகள் குறித்து அரசு அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தும் முறையை கொண்டுவந்தார். எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ். மூலம் வாக்கு சேகரிக்கும் முறையை கையாண்டார்.
இந்நிலையில் தற்போது நடைபெறவுள்ள நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் தனது கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கு முன்பு நவீன தொழில்நுட்பம் மூலம் அந்தந்த தொகுதி மக்களிடம் கருத்துகளை கேட்க உள்ளார். இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை ஹைதராபாத்தில் தனது இல்லத்தில் நிருபர்கள் முன்னிலையில் அவர் செயல் விளக்கம் அளித்தார்.
ஐ.வி.ஆர். (Interactive voice response) எனும் தொழில்நுட்பம் மூலம் ஏற்கெனவே தேர்வுசெய்த 4 வேட்பாளர்கள் குறித்து அந்தந்தப் பகுதி பொதுமக்களிடம் செல்போன் மூலம் கருத்து கேட்கப்படுகிறது. இதில், யாராவது ஒருவரை தேர்ந்தெடுத்து பொதுமக்கள் குறுந்தகவல் அனுப்பலாம். வேறு யாரையாவதும் சிபாரிசு செய்யலாம். அதிகம் பேர் ஆதரவு தெரிவித்த வேட்பாளருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும்.
இந்த புதிய முறையால் வேட்பாளர்கள் கதிகலங்கி உள்ளனர்.