ஒரு கிராமத்தில் அதன் இடுகாடுகளும் உடல் தகன மைதானங்களும் அதன் மக்கள் தொகைக்கேற்ற அளவில் இருக்க வேண்டும் என்று உத்தரப் பிரதேச பாஜக எம்.பி. சாக்ஷி மகராஜ் தெரிவித்துள்ளார்.
அதாவது கிராமங்களில் இந்துக்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது, முஸ்லிம்களின் இடுகாடுகள் அளவில் பெரிதாக உள்ளன என்று கூறுகிறார் சாக்ஷி மகராஜ். பாங்கர்மவு சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் சாக்ஷி மகராஜ் இவ்வாறு கூறியுள்ளார்.
“இடுகாடுகளும், தகன மைதானங்களும் மக்கள் தொகை எப்படியோ அதற்கேற்ற அளவில் இருக்க வேண்டும். ஒரு முஸ்லிம் இருந்தால் கூட அவர்களது ’காப்ரிஸ்தான்’ பெரிதாக இருக்கிறது. ஆனால் இந்துக்களோ வயல்களில் உடல்களை தகனம் செய்ய வேண்டியுள்ளது, அல்லது கங்கையில் விட வேண்டியிருக்கிறது. இது மிகப்பெரிய அநீதி இல்லையா?
இந்துக்களின் பொறுமையையும் நாகரீக நடத்தையையும் சோதிக்கக் கூடாது” என்றார் சாக்ஷி மகராஜ். இவரது சர்ச்சைக்குரிய பேச்சுகள் சமூக வலைத்தளங்களில் பிரபலம்.
இவர் மட்டுமல்ல 2017-ல் உ.பி. சட்டமன்ற தேர்தலில் பிரதமர் மோடி பிரச்சாரத்தின் போது, அதாவது சமாஜ்வாதி ஆட்சியிலிருந்த போது, ஒருகிராமத்தில் இடுகாடு உருவாக்கப்படுகிறது என்றால் தகன மைதானமும் உருவாக்கப்பட வேண்டும் என்று பேசியுள்ளார்.
பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கி பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சிங் யாதவ் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட பிறகு இந்தத் தொகுதி காலியாக உள்ளது, அதற்கான இடைத்தேர்தல் பிரச்சாரத்தை இதே தொகுதியில் யோகி ஆதித்யநாத்தும் விரைவில் மேற்கொள்ளவிருக்கிறார்