தேர்தலில் போட்டியிடும் மாற்றுக் கட்சியினரின் தந்திரங்களிலிருந்து பாதுகாப்பாக இருங்கள் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வாக்காளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு அக்டோபர் 28, நவம்பர் 3, நவம்பர் 7 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. முதல்கட்டத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையோடு நிறைவடைவதால் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தனது கட்சியின் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பை வழங்கும்படி பிஹார் வாக்காளர்களிடம் இன்று ஆதரவைக் கோரியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:
"பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலின் முதல் கட்டத்திற்கான தேர்தல் பிரச்சாரம் முடிவடையும் நிலையில் உள்ளது. எனவே, போட்டியிடும் மாற்றுக் கட்சியினரின் அனைத்து வகையான சதிகளிலிருந்தும் தந்திரங்களிலிருந்தும் உங்களைக் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.
பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் ஆர்.எல்.எஸ்.பி கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன்.''
இவ்வாறு மாயாவதி தெரிவித்துள்ளார்.