இந்தியா

உ.பி.யில் சாது அடித்துக் கொலை, மற்றொருவர் மர்மமான முறையில் தூக்கு

ஆர்.ஷபிமுன்னா

உத்திரப்பிரதேசத்தின் ஹமீர்பூரில் ஒரு சாது நேற்று அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். மற்றொரு சாது மர்மமான முறையில் தூக்கிலில் தொங்க விடப்பட்டுள்ளார்.

உபியின் புந்தேல்கண்ட் பகுதியின் ஹமீர்பூர் மாவட்டத்தில் இருப்பது கரீஹி மிஹுனா கிராமம். இங்குள்ள சித் பாபா கோயிலில் மடாதிபதியாக இருப்பவர் மஹந்த் ரதிராம்(60).

இங்கு அவர் தன் சகா ஓட்டிய இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரில் வந்த எஸ்யுவி மோதிய விபத்தால் இருஓட்டுநர்களுக்கு இடையே வாக்குவாதம் உருவானது.

இது குறித்து அப்பகுதி காவல்நிலையத்தின் ஆய்வாளர் பாங்கே பிஹாரி சிங் கூறும்போது, ’மஹந்த் ரதிராம் செய்த சமாதான முயற்சியில் பலன் இல்லாமல் மோதலானது. இதனால், எஸ்யுவியில் பயணம் செய்தவர்களின் நண்பர்களும் அங்கு வந்தனர்.

அனைவரும் சேர்ந்து இரும்பு தடிகளால் மஹந்தை ரதியை கடுமையாகத் தாக்கியுள்ளனர். படுகாயம் அடைந்தவரை மருத்துவமனை கொண்டு செல்லும் போது வழியிலேயே உயிரிழந்தார். ஒருவர் கைது செய்யப்பட்டு நால்வரை தேடி வருகிறோம்’ எனத் தெரிவித்தார்.

இதனிடையே, உபியின் தலைநகரான லக்னோவில் புறநகர் பகுதியான துபக்காவிலும் ஒரு சாது பலியாகி உள்ளார். சக்தேவ் சாஹு எனும் அவர் அதன் காட்டுப்பகுதியின் ஒரு மரத்தில் தூக்கில் தொங்க விடப்பட்டிருந்தார்.

மிக அதிக உயரமான அம்மரத்தில் தூக்கிலிடப்பட்டிருந்த சாஹுவின் ஒரு காலில் பலத்த காயம் இருந்தது. இதனால், அவர் மரம் ஏறியிருக்க வாய்ப்பில்லை எனவும், அவரை யாரோ தூக்கில் தொங்கி விட்டிருப்பதாகக் கருதப்படுகிறது.

இதன் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். இதுபோல் சாதுக்கள் கொல்லப்படுவதும், தாக்கப்படுவதும் கடந்த ஒரு வருடங்களாக அதிகரித்து வருகிறது.

பாஜக ஆளும் உபியில் முதல்வராக ஒரு சாதுவான யோகி ஆதித்யநாத் அமர்ந்துள்ளார். இவரது தலைமையில் ஏற்பட்டு வரும் நிலைக்கு உபியின் சாதுக்கள் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகிறது.

SCROLL FOR NEXT