இந்தியா

நான் விலகுவதற்கு பிரசாந்த் கிஷோர் தூண்டுதலா?- வெளியாரின்யோசனை தேவையில்லை: மறுக்கும் சிராக் பாஸ்வான்

ஆர்.ஷபிமுன்னா

பிஹாரின் பக்ஸர் மாவட்டத்தின் அஹிரொலியை சேர்ந்தவர் ’பி.கே’ என்றழைக்கப்படும் பிரஷாந்த் கிஷோர் பாண்டே(42). இவரது தந்தையான ஸ்ரீகாந்த் பாண்டே, பக்ஸர்வாசிகள் இடையே பிரபலமான மருத்துவர். ஆனால், வெளிநாட்டில் பணியாற்றி வந்த பிரஷாந்த் குஜராத்திகள் மூலமாக அம்மாநில முதல்வராக இருந்த நரேந்திர மோடிக்கு அறிமுகமானார்.

இவரது திறனை உணர்ந்த மோடி 2012 சட்டப்பேரவை தேர்தலில் பிரஷாந்த் அமைத்த பிரச்சார வியூகங்களால் மீண்டும் முதல்வர் ஆனார். இதற்காக சமூகவலைதளங்களை முக்கிய ஆயுதமாகப் பயன்படுத்தி ஒரு குழு அமைத்தவர் புதிய தொழிலாக்கி ஐ-பேக் எனும் நிறுவனம் துவக்கினார். இதன் சார்பில் நிதிஷ்குமார், காங்கிரஸ், அர்விந்த் கேஜ்ரிவால், ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோருக்காக சட்டப்பேரவை தேர்தலில் ஆற்றிய பணியிலும் வெற்றி கிடைத்தது.

இதனிடையே, நிதிஷுடன் மிகவும் நெருக்கமானவர் பிறகு குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்தமைக்காக, ஜனவரி 29, 2020 இல் நிதிஷால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் பிரஷாந்த். இதனால், பிஹார் இளைஞர்களை பஞ்சாயத்து தலைவர்களாக்குவதாகக் கூறி பிரஷாந்த் ’பாத் பிஹார் கி(பிஹார் மீதானப் பேச்சு)’ எனும் பெயரில் துவக்கிய அரசியல் இயக்கம் பிரபலமானது. இதற்காக சுமார் 9 லட்சம் இளைஞர்கள் விண்ணப்பித்திருந்தனர்.

இந்நிலையில் பிரசாந்த் கிஷோரின் காங்கிரஸ் மற்றும் திமுகவின் 2021 சட்டப்பேரவை தேர்தல்பணிகள் தொடர்கின்றன. ஆனால், தம் சொந்த மாநிலத்தின் சட்டப்பேரவை தேர்தலில் ஏனோ, பிரசாந்திற்கு பங்களிப்பு இல்லாமல் போய் உள்ளது.

இது குறித்து ’இந்து தமிழ்’ நாளேட்டிடம் பிஹாரின் மூத்த பத்திரிகையாளரான சுசில் குமார் பாதக் கூறும்போது, ‘பிரசாந்தை பயன்படுத்தி 5 தேர்தல்களில் வெற்றி கண்ட 5 கட்சிகள் எதிரும், புதிருமானவை. இவ்வளவு திறமை வாய்ந்தவர் பிஹார் தேர்தலில் இல்லாமல் போனது ஆச்சரியமாக உள்ளது. இவர், பிஹாரில் புதிய அரசியல் கட்சி துவக்கி களம் இறங்க முயல்வார் என்பதால் மற்ற கட்சிகள் பிரஷாந்தை ஒதுக்கி விட்டனர் போலும்.’ எனத் தெரிவித்தார்.

இதனிடையே, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணியில் இருந்து பிஹாரில் மட்டும் லோக் ஜன சக்தி(எல்ஜேபி) விலகிய பின்னணியில் பிரஷாந்த் கிஷோர் இருப்பதாக புகார் உள்ளது. இதை மேடைகளிலும் முன்வைக்கும் நிதிஷ்குமாருக்கு விலகி எல்ஜேபியின் தலைவர் சிராக் பாஸ்வான் மறுப்பு தெரிவித்து வருகிறார். மறைந்த தனது தந்தை ராம்விலாஸ் பாஸ்வானின் 20 வருட உழைப்பில் வளர்ந்த கட்சியே போதுமானது எனவும், வெளியாரின் யோசனை தேவையில்லை என்றும் சிராக் பதில் அளித்துள்ளார்.

SCROLL FOR NEXT