கேரளாவின் காசர்கோடு மாவட்டம் அனந்தபுராவில் உள்ள பெருமாள் கோயில் குளத்தில் வாழும் முதலையுடன் கோயில் அர்ச்சகர். 
இந்தியா

கேரளாவின் பெருமாள் கோயில் குளத்தில் 70 ஆண்டுகளாக வாழும் சைவ முதலை: அர்ச்சகர், பக்தர்களின் பிரசாதம்தான் உணவு

செய்திப்பிரிவு

கேரள கோயிலில் முதலை ஒன்று பக்தர்கள் அளிக்கும் பிரசாதங்களை மட்டும் உண்டு சைவ பிராணியாக வாழ்ந்து வருகிறது.

கேரளாவில் காசர்கோடு மாவட்டம் அனந்தபுரா என்ற கிராமத்தில் பிரசித்தி பெற்ற பெருமாள் கோயில் ஒன்று உள்ளது. கோயில் வளாகத்துக்குள் உள்ள குளத்தில் முதலை ஒன்று உள்ளது. கோயிலை இந்த முதலைதான் பாதுகாத்து வருவதாக பக்தர் களின் நம்பிக்கை. இந்த முதலை70 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்கிறது. அந்த முதலையின் பெயர் பாபியா. மாமிச உண்ணியான இந்த முதலை, கோயில் குளத்தில் உள்ள மீன்களை கூட சாப்பிட்டது இல்லை. கோயில் அர்ச்சகர் மற்றும் பக்தர்கள் அளிக்கும் பிரசாதத்தை மட்டுமே உண்டு வருகிறது. அதனால், இதை தெய்வீக முதலையாக பக்தர்கள் கருதுகின்றனர்.

இரவு நேரங்களில் குளத்தில் இருந்து கோயில் வளாகத்துக்குள் முதலை வரும். ஆனால், எப்படி இது மீண்டும் குளத்துக்கு போகிறது என்று யாருக்கும் தெரியாது. கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கோயிலின் நமஸ்கார மண்டபத்துக்குள் முதலை நுழைந்துள்ளது. காலையில் கோயிலுக்குள் அர்ச்சகருடன் சென்றவர் இதைப் பார்த்துவிட்டு அந்த முதலையை படம் எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிட்டார். அந்த முதலையின் படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. பல ஆண்டுகளாக கோயில்பிரசாதத்தையே உண்டு வாழ்வதால் அதுவே பழக்கமாகி முதலை சைவமாக இருக்கலாம் என்று கேரள பல்கலைக்கழகத்தின் நீர்வாழ் உயிரினங்கள் ஆய்வுத்துறை தலைவர் பிஜூ குமார் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT