திருப்பதியில் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் இறுதி நாளான நேற்று காலையில் சக்கர ஸ்நானம் நடைபெற்றது. 
இந்தியா

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சக்கர ஸ்நானத்துடன் நிறைவடைந்தது பிரம்மோற்சவ விழா

என். மகேஷ்குமார்

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா சக்கரஸ்நான நிகழ்ச்சியுடன் நிறைவு பெற்றது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 16-ம் தேதி நவராத்திரி பிரம்மோற்சவ விழா தொடங்கியது. கரோனா பரவலை தடுக்கும் விதத்தில் மாட வீதிகளில் நடத்தப்படும் வாகன சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதற்கு பதிலாக, கோயிலுக்குள்ளேயே உற்சவ மூர்த்திகளுக்கு தினமும் காலை, இரவு ஆகிய இரு வேளைகளிலும் வாகனசேவை நடைபெற்றது.

இவ்விழாவின் இறுதி நாளான நேற்று காலையில் கோயிலுக்குள் தற்காலிகமாக கட்டப்பட்ட ஒரு சிறு தண்ணீர் தொட்டி முன்பு சக்கர ஸ்நான நிகழ்ச்சிகள் நடந்தன. உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் மலையப்பர் மற்றும் சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு திருமஞ்சன சேவைகள் நடைபெற்றன. அதன் பின்னர் சக்கர ஸ்நான நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியுடன் நவராத்திரி பிரம்மோற்சவம் நிறைவடைந்தது.

திருப்பதி ஏழுமலையானை தற்போது விஐபிக்கள், ரூ.300 ஆன்லைன் டிக்கெட், ரூ.1,000 ஆன்லைன் டிக்கெட் கல்யாண உற்சவ அனுமதி பெற்ற பக்தர்கள்மட்டுமே சுவாமியை தரிசித்து வருகின்றனர். ஆனால், சாதாரணபக்தர்கள் மட்டும் அலிபிரி மலையடிவாரத்தில் உள்ள பாதாலு மண்டபம் எனும் இடத்திற்கு சென்று அங்குள்ள பெருமாள் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு, அங்கேயே முடி காணிக்கை செலுத்தி, உண்டியலில் காணிக்கையையும் செலுத்தி, தேங்காயை உடைத்து வழிபட்டு ஊர் திரும்பும் நிலை உள்ளது. தற்போது பதவி ஏற்றுள்ள புதிய தலைமை நிர்வாக அதிகாரி ஜவஹர் ரெட்டியாவது சாதாரண பக்தர்கள் சர்வ தரிசனம் மூலம் தரிசிக்க வழி செய்ய வேண்டுமென பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

SCROLL FOR NEXT