கரோனா வைரஸ் தடுப்பூசி இறுதியாக ஒன்று தயாராகும்போது அனைத்து இந்தியர்களுக்கும் இலவசமாகக் கிடைக்க வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்தார்.
அடுத்த வாரம் பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுதை முன்னிட்டு, பாஜக தனது தேர்தல் அறிக்கையில் இலவச கோவிட் தடுப்பூசிகளை வழங்குவதாக வாக்குறுதி அளித்துள்ளது.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வியாழக்கிழமை கூறுகையில், "எங்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள முதல் வாக்குறுதி பிஹாரில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் இலவச கரோனா வைரஸ் தடுப்பூசிகள் கிடைக்கும் என்பதுதான்'' என்றார்.
பாஜகவின் தேர்தல் அறிக்கையில் கோவிட் தடுப்பூசி இடம்பெற்றதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. அரவிந்த் கேஜ்ரிவால் பேசுகையில், ''பாஜகவுக்கு வாக்களிக்காத இந்தியர்களுக்கும் இலவசத் தடுப்பூசிகள் கிடைக்குமா?'' என்று கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில் டெல்லியின் சாஸ்திரி பூங்கா மற்றும் சீலாம்பூர் சுற்றுப்புறங்களில் அமைக்கப்பட்டுள்ள இரு புதிய மேம்பாலங்களைத் திறந்து வைத்த அரவிந்த் கேஜ்ரிவால், கோவிட் தடுப்பூசி நாட்டு மக்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய கேஜ்ரிவால், ''முழு நாட்டிற்கும் இலவச கோவிட் தடுப்பூசி கிடைக்க வேண்டும். இது அனைவருக்குமான உரிமை. இந்திய மக்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே நாட்டு மக்கள் அனைவருக்கும் கோவிட் தடுப்பூசி இலவசமாகக் கிடைக்க வேண்டும்'' என்றார்.
மத்திய அரசின் கரோனா தடுப்பூசி விநியோகத் திட்டம்
கரோனா வைரஸ் தடுப்பூசி விநியோகம் குறித்து மத்திய அரசிடம் புதிய திட்டங்கள் உருவாகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தடுப்பூசி கிடைத்தவுடன், ஒரு சிறப்பு கோவிட்-19 நோய்த்தடுப்பு திட்டத்தின் கீழ் விநியோகம் தொடங்கப்பட உள்ளதாகவும், கோவிட்-19 தடுப்பூசியை தேவையான அளவு மத்திய அரசு நேரடியாக கொள்முதல் செய்த பிறகு, தற்போதுள்ள மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களின் நெட்வொர்க் மூலம் இலவசமாக கிடைக்குமாறு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.