பாஜக எம்.பி. மீனாட்சி லெகி :கோப்புப்படம் 
இந்தியா

அக்.28-ம் தேதி ஆஜராக வேண்டும்: அமேசான் நிறுவனத்துக்கு நாடாளுமன்றக் கூட்டுக்குழு எச்சரிக்கை

பிடிஐ

நாடாளுமன்றக் கூட்டுக்குழு முன் வரும் 28-ம் தேதி அமேசான் நிறுவன அதிகாரிகள் நேரில் ஆஜராக வேண்டும். ஆஜராகாவிட்டால், அதன்பின் உரிமை மீறல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் தலைவர், பாஜக எம்.பி. மீனாட்சி லெகி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாகவும், காங்கிரஸுக்கு எதிராகவும் ஃபேஸ்புக் நிறுவனம் செயல்படுவதாக அண்மையில் குற்றச்சாட்டு எழுந்தது.

பாஜக மற்றும் வலதுசாரித் தலைவர்களின் வெறுப்புணர்வூட்டும் பேச்சுகளை ஃபேஸ்புக் தடை செய்வதில்லை என்றும், அதே சமயத்தில் காங்கிரஸ் தலைவர்களின் வீடியோக்களையும், பதிவுகளையும் திட்டமிட்டு அந்நிறுவனம் தடை செய்வதாகவும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

இது தொடர்பாக இந்திய ஃபேஸ்புக் பிரதிநிதிகளிடம் விசாரிக்க வலியுறுத்தி, அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மார்க் ஸுக்கர்பெர்க்குக்கு கடிதமும் எழுதப்பட்டது.

இதனிடையே, ஃபேஸ்புக் நிறுவனத்துக்கும், பாஜகவுக்கும் இடையே தொடர்பு உள்ளதாக அமெரிக்காவின் ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ பத்திரிகை கடந்த ஆகஸ்ட் மாதம் செய்தி வெளியிட்டது. இந்நிலையில் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள், தங்கள் பயனாளிகளின் தகவல்களை விளம்பர நோக்கங்களுக்காக மற்றவர்களுக்குப் பகிர்வதாகவும் புகார்கள் எழுந்து வந்தன.

இது தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு ஃபேஸ்புக், ட்விட்டர், கூகுள் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு பாஜக எம்.பி. மீனாட்சி லேகி தலைமையிலான நாடாளுமன்றக் கூட்டுக்குழு நேற்று முன்தினம் நோட்டீஸ் அனுப்பியது.

அதன்படி, அந்தக் குழு முன்பு ஃபேஸ்புக் நிறுவனத்தின் கொள்கைப் பிரிவுத் தலைவர் அன்கி தாஸ் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று ஆஜராகி விளக்கமளித்தனர். அவர்களிடம் ஏறக்குறைய 2 மணி நேரம் நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை நடத்தியது.

ஆனால், அமேசான் நிறுவனம், நாடாளுமன்றக் கூட்டுக்குழு முன் ஆஜராகி விளக்கம் அளிக்க முடியாது என்று தெரிவித்துவிட்டது.

இதுகுறித்து நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் தலைவர் மீனாட்சி லெகி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “டேட்டா பாதுகாப்புக்கான நாடாளுமன்றக் கூட்டுக்குழு முன் நேரில் ஆஜராகக் கோரி ட்விட்டர் நிறுவனத்துக்கு வரும் 28-ம்தேதியும், கூகுள், பேடிஎம் நிறுவனங்களுக்கு 29-ம் தேதியும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

ஆனால், அமேசான் நிறுவனம் வரும் 28-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளது. அமேசான் நிறுவனத்தின் சார்பில் அதன் பிரதிநிதிகள் யாரேனும் ஒருவர் கூட்டுக்குழு முன் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்காவிட்டால் உரிமை மீறல் தீர்மானம் எடுக்கப் பரிந்துரைக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

காங்கிரஸ் எம்.பி. விவேக் தன்ஹா கூறுகையில், “யாரும் இந்திய அரசையும், நாடாளுமன்றத்தையும் எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. நாடாளுமன்றக் கூட்டுக்குழு என்பது சிறிய நாடாளுமன்றம் போன்றது என்பதை ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள் புரிந்துகொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.

பாஜக எம்.பி. அமர் பட்நாயக் கூறுகையில், “நாடாளுமன்றக் கூட்டுக்குழு முன் அமேசான் நிறுவனம் நேரில் ஆஜராக மறுப்பது என்பது, நாடாளுமன்றத்தில் நேரில் வந்து விளக்கம் அளிக்க மறுப்பதற்குச் சமமாகும். இது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்கத் தகுதியடையது” எனத் தெரிவித்தார்.

ஆனால், அமேசான் நிறுவனமோ தங்கள் நிறுவனத்தின் முக்கியப் பிரதிநிதிகள் அனைவரும் தற்போது வெளிநாட்டில் இருக்கிறார்கள். கரோனா காரணமாகப் பயணிக்க முடியாது என்பதால், நாடாளுமன்ற கூட்டுக்குழு முன் ஆஜராக முடியாது எனத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT