கோப்புப் படம் 
இந்தியா

பெண்களின் திருமண வயதை உயர்த்த முஸ்லிம் பெண்கள் அமைப்பு எதிர்ப்பு

செய்திப்பிரிவு

இந்திய முஸ்லிம் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவின் செயலாளர் பி.கே.நூர்பனா ரஷீத் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

பல வளரும் நாடுகள் பெண்களின் திருமண வயதை 21-லிருந்து 18 ஆகக் குறைத்துள்ளன. உயிரியல் ரீதியான மற்றும் சமூக தேவையை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்தன. இந்நிலையில், இந்தியாவில் 18 ஆக உள்ள பெண்களின் திருமண வயதை அதிகரிப்பது பற்றி பரிசீலிக்கப்படுகிறது. பெண்களின் திருமண வயதை அதிகரித்தால், திருமணம் செய்துகொள்ளாமல் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதற்கும் சட்டவிரோத உறவுகளுக்கும் வழிவகுப்பதாக அமைந்துவிடும்.

குழந்தை திருமண தடை சட்டத்தை (2006) அமல்படுத்துவதற்கு பதில் சட்டபூர்வ திருமண வயதை அதிகரிப்பது அநீதியான செயல். ஊரக பகுதியில் 30 சதவீத பெண்களுக்கு 18 வயதுக்கு முன்பே திருமணம் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், திருமண வயதை அதிகரித்தால் இன்னும் நிலை மோசமாகும். எனவே, பெண்களின் திருமண வயதை உயர்த்தக் கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT