நவம்பர் 9 ஆம் தேதி லாலு ஜாமீனில் சிறையிலிருந்து வெளியே வருகிறார்; அடுத்த நாள் நிதீஷ் பிரியாவிடை பெறுவார் என்று ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார். பிஹாரில் இன்று நடைபெற்றுவரும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தேஜஸ்வி இவ்வாறு தெரிவித்தார்.
பிஹாரில் இந்த மாதம் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் பிரச்சாரம் மாநிலத்தில் சூடுபிடித்து வருகிறது.
அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் நவம்பர் 7 ஆகிய தேதிகளில் மாநிலம் மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தேர்தலின் முடிவுகள் நவம்பர் 10 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளன.
மாட்டுத் தீவன மோசடி வழக்குகளில் தண்டனை பெற்ற பின்னர் லாலு பிரசாத் யாதவ், ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நீதிமன்றக் காவலில் உள்ளார். சாய்பாசா கருவூலம் தொடர்பான வழக்கில் அவருக்கு சமீபத்தில் ஜார்கண்ட் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது, ஆனால் தும்கா கருவூலத்தில் இருந்து பணம் பெற்ற மற்றொரு மோசடி வழக்கில் அவரது ஜாமீன் மனு விசாரிக்கப்பட்டு வருகிறது. இதனால் சிறையில் இருந்து வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அடுத்த மாதம் அவர் ஜாமீனில் வரும்போது நிதீஷ்குமார் பதவியிலிருந்து விடைபெறுவார் என்பதை தேஜஸ்வி யாதவ் சூசகமாக தெரிவித்தார்.
நவாடா மாவட்டத்தில் ஹிஸ்வா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு தேஜஷ்வி பேசியதாவது:
"லாலுஜி நவம்பர் 9 ஆம் தேதி விடுதலை செய்யப்படுகிறார். அவருக்கு ஒரு ஜாமீன் கிடைத்துள்ளது, நவம்பர் 9 ஆம் தேதி இன்னொரு ஜாமீனையும் பெறுவார், அதுவும் எனது பிறந்தநாளாகும். அடுத்த நாள், நிதிஷ்ஜி விடைபெறுவார்.
நிதிஷ்குமார் அரசாங்கம் ஊழலை வேரறுக்கவும், தொழில்களைக் கொண்டுவரவும், வேலைவாய்ப்பை வழங்கவும், வாழ்வாதாரத்திற்கான இடம்பெயர்வுகளை சரிபார்க்கவும் தவறிவிட்டது. நிதிஷ்ஜி, நீங்கள் சோர்வடைந்துவிட்டீர்கள், பிஹாரை இனி நீங்கள் கவனித்துக் கொள்ள முடியாது.
பிஹாரில் தொழில்மயமாக்கல் இல்லை, ஏனெனில் அது விவசாய நிலங்களால் சூழப்பட்டுள்ளது, எங்கள் மகாபந்தன் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தனது முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் 10 லட்சம் அரசு வேலைகளை வழங்குவதற்கான முதல் சட்டத்தை இயற்றுவோம்.
"15 ஆண்டுகளில் உங்களுக்கு வேலைகள், கல்வி, சுகாதார வசதிகள் மற்றும் தொழில்கள் வழங்காதவர்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளிலும் அவ்வாறு செய்யப் போவதில்லை. பிரதமர் பிஹார் வந்துள்ளார். பிஹார் எப்போது சிறப்பு மாநில அந்தஸ்து நிலையை அடையும் என்று அவர் சொல்வார் என்று நான் எதிர்பார்த்தேன். நீங்கள் எத்தனை அரசு வேலைகளை வழங்கினீர்கள் என்பதை நீங்கள் வெளிப்படுத்தியிருக்க வேண்டும்.
கரோனா வைரஸின் பயம் காரணமாக ஜே.டி.யூ தலைவர் 144 நாட்கள் தனது வீட்டிலிருந்து வெளியே வரவில்லை. கரோனா வைரஸ் இன்னும் உள்ளது, ஆனால் இப்போது அவர் வெளியே வருகிறார், ஏனென்றால் அவர் வாக்குகளை விரும்புகிறார், நாற்காலியை விரும்புகிறார்.
தனது வாக்குறுதியளிக்கப்பட்ட 10 லட்சம் வேலைகளுக்கு எங்கிருந்து நிதி கொண்டு வருவார் என்ற தேசிய ஜனநாயக கூட்டணி நம்மிடம் கேள்வி எழுப்பியுள்ளது. அதற்கு என்னுடைய பதில் பிஹாரில் ரூ .2.13 லட்சம் கோடி பட்ஜெட் உள்ளது, நிதிஷ் குமார் அரசாங்கம் 60 சதவீதத்தை மட்டுமே செலவழிக்கிறது. இன்னும் ரூ .80,000 கோடி மீதமுள்ளது என்பதை அவர்களுக்கு சொல்லிக்கொள்ளவிரும்புகிறேன்.
இந்த சண்டை நிதிஷுக்கும் தேஜஸ்விக்கும் இடையில் இல்லை, ராகுல் காந்திக்கும் நரேந்திர மோடிக்கும் இடையில் இல்லை. இது மக்களுக்கும் சர்வாதிகார அரசாங்கத்திற்கும் இடையிலான சண்டை ஆகும்.
இவ்வாறு தேஜஸ்வி யாதவ் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் தெரிவித்தார்.