இந்தியா

காஷ்மீரில் லஷ்கர்- இ-தொய்பா கமாண்டர் சுட்டுக் கொலை

பிடிஐ

காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) நடந்த என்கவுன்ட்டரில் லஷ்கர்- இ-தொய்பா கமாண்டர் அபு காசிம் சுட்டுக் கொல்லப்பட்டார்.

நேற்று (புதன்கிழமை) தொடங்கிய இந்த என்கவுன்ட்டர் இன்று அதிகாலை முடிவுக்கு வந்தது. என்கவுன்ட்டரில் ராணுவ வீரர் ஒருவர் வீர மரணமடைந்தார்.

இது தொடர்பாக காஷ்மீர் போலீஸ் ஐ.ஜி. கிலானி செய்தியாளர்களிடம் கூறும்போது, "இன்று அதிகாலை குல்காம் மாவட்டம் கண்ட்யாபூர் கிராமத்தில் பதுங்கியிருந்த லஷ்கர்- இ-தொய்பா கமாண்டர் அபு காசிமை பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தினர். காஷ்மீரில் கடந்த 3 ஆண்டுகளில் நடந்த பெரிய தாக்குதல்களுக்கு பின் மூளையாக செயல்பட்டவர் அபு காசிம்" என்றார்.

அண்மையில் பந்திபூரா மாவட்டத்தில் நடந்த என்கவுன்ட்டரின்போது அட்லாப் அகமது என்ற போலீஸ்காரரை அபு காசிம் சுட்டுக் கொன்றார் என்பது கவனிக்கத்தக்கது.

கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் மீது தீவிரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். இதில் 2 வீரர்கள் இறந்தனர். பதில் தாக்குதல் நடத்தியதில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். பாகிஸ்தான் ஆதரவு லஷ்கர்- இ-தொய்பா தீவிரவாதி ஒருவருரை உயிருடன் பிடித்தனர். உதம்பூரில் நடந்த இத்தாக்குதலில் அபு காசிமுக்கு முக்கியப் பங்கு உண்டு. அண்மையில்தான் அபு காசிம் வடக்கு காஷ்மீருக்கு இடம் பெயர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2013-ல் ஹைதர்பூராவில் அபு காசிம் தலைமையில் நடந்த தாக்குதலில் ராணுவ வீரர்கள் 8 பேர் பலியாகினர். 2012-ல் சில்வர் ஸ்டார் ஓட்டலில் நடந்த தாக்குதல், 2013-ல் பாம்பூரில் நடந்த தாக்குதல் ஆகியவற்றின் மூளையாக செயல்பட்டது அபு காசிமே.

ஒருவர் வீர மரணம்:

அபு காசிமை வீழ்த்த நடந்த என்கவுன்ட்டரில் ராணுவ வீரர் ஒருவர் வீர மரணமடைந்தார். 14-வது ராஷ்டிரீய ரைபில்ஸ் படைப் பிரிவைச் சேர்ந்த வீரர் மீது என்கவுன்ட்டரில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்தது. சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

SCROLL FOR NEXT