உத்திரப்பிரதேசத்தில் இருந்து பிஹாருக்கு அரசு பேருந்து சேவையை தொடங்கி உள்ளது முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு. இன்று முதல் தொடக்கப்பட்ட இச்சேவை பிஹார் சட்டப்பேரவை தேர்தலின் எதிரொலியாகப் பார்க்கப்படுகிறது.
உ.பி.யின் ஆஸம்கர், வாரணாசி மற்றும் கோரக்பூர் ஆகிய மண்டலங்களின் கீழான ஏழு மாவட்டங்கள் பிஹாரின் எல்லைகளில் அமைந்துள்ளன. இதனால், இந்த இருமாநிலங்களின் மாவட்டங்களுக்கு இடையில் மக்கள் போக்குவரத்து அதிகம்.
இதற்காக சாலைவழியாக வரும் பிஹார்வாசிகள் தங்கள் எல்லையில் இறங்கி உ.பி.யில் நுழைந்து வேறு பேருந்துகள் பிடித்து செல்ல வேண்டும். இதன் மற்றொரு வழியாக ரயில் பயணம் அமைந்துள்ளது.
இந்நிலையில், பிஹார்வாசிகளின் நீண்டகால கோரிக்கையாக இருமாநிலங்களுக்கு இடையிலான உ.பி. அரசு பேருந்தின் சேவை இன்று முதல் தொடங்கி உள்ளது. இதன் முதல்கட்டமாக லக்னோவின் ஆலம்பாக் பேருந்து நிலையத்தில் இருந்து புத்தகயாவிற்கு முதல் பேருந்து இயக்கப்பட்டுள்ளது.
சுமார் 600 கி.மீ தொலைவிற்கான அதன் கட்டணத்தொகையாக ரூ.685 வசூல் செய்யவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வரும் தீபாவளி பண்டிகைக்கு முன்பாக உ.பி.யின் ஐந்து மாவட்டங்களில் இருந்து மேலும் 85 பேருந்துகளை இயக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இதில் தேவைக்கு ஏற்ப சில வழித்தடங்களிலும் மாற்றங்கள் செய்ய உள்ளது. பிஹாரின் சட்டப்பேரவைக்கு வரும் அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7 தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.
இதில் உ.பி.யில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி பிஹார் தேர்தலின் முக்கியப் போட்டியாளராக உள்ளது. எனவே, உ.பி.யில் விடப்படும் பேருந்துகளின் பலன் தம் கூட்டணிக்கு மீண்டும் ஆட்சி அமைக்க உதவும் என பாஜக நம்புகிறது.