பிஹார் சட்டப்பேரவைத்த தேர்தலில் வென்றால், மாநில மக்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்ற பாஜகவின் தேர்தல் வாக்குறுதி குறித்து எதிர்க்கட்சிகள் அதிருப்தி தெரிவித்த நிலையில் தேர்தல் ஆணையம் அதை நிராகரித்துள்ளது.
கடந்த காலங்களிலும் கொள்கை அடிப்படையிலான வாக்குறுதியை காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அளித்ததற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பிஹார் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் 3 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டம் வரும் 28-ம் தேதி 71 தொகுதிகளுக்கு நடக்கிறது. நவம்பர் 10-ம் ேததி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.
இந்த தேர்தலில் பாஜகவின் தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டது. தேர்தல் அறிக்கையைவெளியிட்டு பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “ ஐசிஎம்ஆர் அனுமதியளித்ததும், பிஹாரில் மக்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும். இதுதான் பாஜகவின் முதல் தேர்தல் வாக்குறுதி” என தேர்தல் வாக்குறுதியளித்தார்.
பாஜகவின் தேர்தல் வாக்குறுதியான கரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்பது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்துக்கு விரோதமாக இருக்கிறது. கரோனா விவகாரத்தை அரசியல் ஆதாயத்துக்காக பாஜக கையாள்கிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
இதுகுறித்து தேர்தல் ஆணையத்தின் மூத்த அதிகாரிகள் இந்த விவகாரத்தில் நேரடியாக பதில் அளிக்காமல் கூறுகையில் “ கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது, காங்கிரஸ் கட்சியின் நியாய் திட்டம் குறித்து புகார் எழுந்தது. ஆனால், தேர்தல் ஆணையம் அப்போது எடுத்த நிலைப்பாட்டைத் தான் இப்போதும் எடுக்கும். இதுஒரு அரசியல் கட்சியின் கொள்கைரீதியான வாக்குறுதி.
இந்த கொள்கை ரீதியான வாக்குறுதியில் எந்தவிதமான தேர்தல் விதமுறை மீறலும் இல்லை. மக்கள் பிரதிநிதித்துச்சட்டத்தின்படி, மக்களை ஏமாற்றும் மோசடியான திட்டமும் இல்லை.மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 123 பிரிவு ஊழல் நடைமுறைகளைக் காட்டுகிறது. அந்த வரையரைக்குள் இதுவராது” எனத் தெரிவித்தனர்.
இதற்கு பாஜக தரப்பில் சிலர் கூறுகையில் “ சுகாதாரம் என்பது மாநில அரசுக்கு உட்பட்டது, பிஹாருக்கான தேர்தல் அறிக்கை என்பது அந்த மாநிலத்துக்கானது ஒட்டுமொத்த தேசத்துக்கானது அல்ல. கரோனா தடுப்பூசி வந்தவுடன், மாநில அரசு சார்பில் கொள்முதல் செய்து மக்களுக்கு வழங்கப்படும்” எனத் தெரிவித்தனர்.
ஆனால், பிஹார் மக்களுக்கு இலவசமாக கரோனா தடுப்பூசி வழங்கப்படும் பாஜகவின் தேர்தல் அறிக்கையை காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், சிவசேனா, சமாஜ்வாதி, தேசியமாநாட்டுக் கட்சி ஆகியவை தொடர்ந்து விமர்சித்து வருகின்றன