அக்னி ஏவுகணை சோதனையை தள்ளிவைக்க அமெரிக்காவும் நேட்டோ நாடுகளும் இந்தியாவுக்கு அதிக அழுத்தம் அளித்தன. ஆனால் அதற்கு வளைந்து கொடுக் காத அந்த திட்டத்தின் இயக்குநர் அப்துல் கலாம் வெற்றிகரமாக சோதனையை நடத்தி முடித்தார்.
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கடைசியாக எழுதிய ‘இந்தியாவின் சிறப்பம்சம்: சவால்கள் முதல் வாய்ப்புகள் வரை’ (Advantage India: From Challenge to Opportunity) என்ற நூல் விரைவில் வெளியிடப் படவுள்ளது. அந்த புத்தகத்தின் முக்கிய சாராம்சங்கள் நேற்று வெளி யிடப்பட்டன.
கடந்த 1989 மே 22-ம் தேதி அக்னி ஏவுகணை சோதனை வெற்றிகர மாக நடத்தப்பட்டது. ஆனால் அதற்கு சில மணி நேரத்துக்கு முன்பு அன்றைய கேபினட் செயலாளர் டி.என்.சேஷன் ஹாட்லைன் தொலைபேசியில் அக்னி திட்ட இயக்குநர் அப்துல் கலாமை தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.
அமெரிக்காவும் நேட்டோ நாடு களும் அதிக அழுத்தம் கொடுப்ப தால் அக்னி ஏவுகணை சோத னையை தள்ளி வைக்க முடியுமா என்று கலாமிடம் அவர் கேட்டார்.
ஆனால் கலாம் வளைந்து கொடுக்கவில்லை. சுமார் 10 ஆண்டு களுக்கும் மேலாக உழைத்து அக்னி ஏவுகணையை உருவாக்கி யுள்ளோம். வெளிநாடுகள் தொழில் நுட்ப உதவியை வழங்க மறுத்து விட்டது, மிகக் குறைந்த நிதி ஒதுக்கீடு என பல்வேறு இக்கட்டான சூழ் நிலைகளுக்கு நடுவில் அக்னியை வடிவமைத்துள்ளோம். அதன் சோதனையை நிறுத்த முடியாது என்று சேஷனிடம் அப்துல் கலாம் திட்டவட்டமாக கூறினார்.
சுமார் ஒரு மணி நேர விவாதத் துக்குப் பிறகு கலாமின் நியாயத் தைப் புரிந்து கொண்ட சேஷன், அக்னி சோதனைக்கு ஒப்புதல் அளித்தார். இந்தத் தகவல்களை அப்துல் கலாம் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.