உத்தரபிரதேச மாநிலம் ஹாத்ரஸில் கடந்த மாதம் 14-ம்தேதி தலித் சமூகத்தைச் சேர்ந்த 19 வயது பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு பின்கடுமையாக தாக்கப்பட்டு இறந்தார். 4 குற்றவாளிகள் கைதானஇவ்வழக்கில் சமூக அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் பெரும் போராட்டம் நடத்தின.
இச்சூழலில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு துர்காவின் பெயரில் ‘மிஷன் சக்தி’ எனும் திட்டத்தை முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிமுகப்படுத்தினார். இத்திட்டத் தின் கீழ் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கவும், பாலியல் புகார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, 70 மாவட்டங் களிலும் காவல்துறை துரித நடவடிக்கைகளில் இறங்கியது.
இதன் பலனாக, கடந்த 19 மற்றும் 20-ம் தேதிகளுக்கு இடையிலான 24 மணி நேரத்தில் பல்வேறு மாவட்ட நீதிமன்றங் களில் ஒத்திவைக்கப்பட்டிருந்த வழக்குகளின் தீர்ப்பில் 23 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை கிடைத்துள்ளது. 49 வழக்குகளில் சிக்கி ஜாமீன் பெற்றிருந்தவர்களுக்கு ஜாமீன் ரத்து செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் பாலியல் வழக்குகளில் சிக்கிய 29 குற்றவாளிகளுக்கு அவர்களது சொந்த மாவட்டங்களில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதே வழக்குகளில் 31 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநில ஏடிஜிபி அசுதோஷ் பாண்டே ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் கூறும்போது, "கடந்த ஒரு வருடத்தில் அரசு எடுத்த நடவடிக்கைகளால் 11 பாலியல் வழக்குகளில் 14 பேருக்கு மரண தண்டனை கிடைத்துள்ளது. மேலும் பல வழக்குகளில் விரைந்து விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்துள்ளோம். எங்கள் துறையின் தீவிர நடவடிக்கையால் 88 வழக்குகளில் 117 குற்றவாளிகளின் ஜாமீனை ரத்து செய்துள்ளோம். 41 குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. கரோனா பரவலுக்கு பின் சுமார் 2,000 குற்றவாளிகள் காணொலி மூலம் விசாரிக்கப்பட்டுள்ளனர்" என்றார்.
இந்நிலையில், முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் மிஷன் சக்திக்காக ஒரு இணையதளமும் உருவாக்கப்பட்டுள்ளது.
அதில் பாலியல் புகார்களைபதிவு செய்யவும் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த வகை வழக்குகளின் நிலையும் விவரமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்துடன் பாலியல் வழக்குகள் தொடர்புடைய வீடியோ பதிவுகளும் யுடியூப் மூலம் பதிவேற்றம் செய் யப்பட்டுள்ளன. இதனால், மிஷன் சக்தி திட்டம் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.