தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா, மகாராஷ்டிர ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை நேற்று முன்தினம் சந்தித்துப் பேசி உள்ளார். இது தொடர்பான புகைப்படம் ஒன்று தேசிய மகளிர் ஆணைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டது.
அந்தப் படத்துடன், “மகாராஷ்டிர ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை எங்கள் தலைவர் ரேகா சர்மா சந்தித்துப் பேசினார். அப்போது, அம்மாநிலத்தின் பெண்கள் பாதுகாப்பு குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். குறிப்பாக கரோனா சிகிச்சை மையங்களில் பெண் நோயாளிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானது, லவ் ஜிகாத் வழக்குகள் அதிகரிப்பு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விவாதித்தனர்” என பதிவிடப்பட்டது.
கடந்த பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில், லவ் ஜிகாத் தொடர்பான வழக்குகளை மத்திய புலனாய்வு அமைப்புகள் விசாரிக்கின்றனவா என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய உள் துறை இணை அமைச்சர் கிஷண் ரெட்டி அளித்த பதிலில், “சட்டத்தில் லவ் ஜிகாத் என்பது பற்றி வரையறுக்கப்படவில்லை” என்றார். இந்நிலையில், லவ் ஜிகாத் வழக்கு பற்றி விவாதித்ததாக ரேகா சர்மா கூறியதற்கு ட்விட்டரில் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் ரேகா சர்மாவின் பழைய ட்விட்டர் பதிவுகளை தேடிப்பிடித்து பகிர்ந்தனர். இதையடுத்து, ரேகா சர்மா தனது பழைய பதிவுகளை யாரும் பார்க்காதவாறு செய்துவிட்டார்.