காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் : கோப்புப்படம் 
இந்தியா

பஞ்சாப் சட்டப்பேரவைக் கூட்டத்தில் பாஜக எம்எல்ஏக்கள் பங்கேற்காதது அரசியல் கோழைத்தனம்: ப.சிதம்பரம் தாக்கு

பிடிஐ

பஞ்சாப் சட்டப்பேரவைக் கூட்டத்தில் பாஜக எம்எல்ஏக்கள் பங்கேற்காமல் புறக்கணித்தது அரசியல் கோழைத்தனம் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் கடுமையாகச் சாடியுள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு நாடு முழுவதும் விவசாயிகள், விவசாயி அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம், ஆர்ப்பாட்டத்தை நாள்தோறும் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் அரசு சட்டப்பேரவையைக் கூட்டி 3 மசோதாக்களை நேற்று நிறைவேற்றியது.

ஆனால், இந்த மசோதாக்களை நேற்று முதல்வர் அமரிந்தர் சிங் அறிமுகம் செய்தபோது, அவையில் எதிர்க்கட்சியான பாஜக எம்எல்ஏக்கள் இருவரும் அவையில் இல்லை. அவைக்கு வராமல் புறக்கணித்தனர். ஏறக்குறைய 5 மணி நேரம் அவையில் இந்த மசோதாக்கள் தொடர்பாக விவாதம் நடந்து நிறைவேற்றப்பட்டது.

அதேசமயம், பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளிேயறிய சிரோன்மணி அகாலி தளம், ஆம் ஆத்மி, லோக் இன்சாப் ஆகிய கட்சிகளின் எம்எல்ஏக்கள் அவையில் விவாதத்தில் பங்கேற்று, மசோதாக்களுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

பாஜக எம்எல்ஏக்கள் அவைக்கு வராததை காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கண்டித்து விமர்சித்துள்ளார்.

ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கருத்தில், “பஞ்சாப் அரசின் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பங்கேற்காமல் பாஜக எம்எல்ஏக்கள் ஏன் புறக்கணித்தனர்? மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் அரசு மசோதாக்களை அறிமுகம் செய்கிறது.

பாஜக எம்எல்ஏக்கள் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை, மத்திய அரசின் கொள்கைகளை ஆதரிப்பதாக இருந்தால், துணிச்சலாக சட்டப்பேரவைக் கூட்டத்தில் பங்கேற்று விவாதத்தில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ஆதரித்துப் பேசியிருக்க வேண்டும்.

சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பங்கேற்று பாஜக எம்எல்ஏக்கள் பஞ்சாப் அரசு கொண்டுவந்த மசோதாக்களை எதிர்த்துப் பேசியிருக்க வேண்டும்.

அதைவிடுத்து, சட்டப்பேரவைக்கு பாஜக எம்எல்ஏக்கள் வராமல் புறக்கணித்தது பற்றி வெளிப்படையாகக் கூறவேண்டுமென்றால், அரசியல் கோழைத்தனம்” எனச் சாடியுள்ளார்.

SCROLL FOR NEXT