ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் : கோப்புப்படம் 
இந்தியா

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக ராஜஸ்தான் அரசும் மசோதா கொண்டுவர முடிவு: முதல்வர் அசோக் கெலாட் உறுதி

பிடிஐ

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் மாநில அரசு மசோதாக்கள் கொண்டுவந்து நிறைவேற்றியதுபோல், ராஜஸ்தான் அரசும் சட்டப்பேரவையில் மசோதாக்கள் கொண்டுவந்து நிறைவேற்றும் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்தார்.

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு நாடு முழுவதும் விவசாயிகள், விவசாயிகள் அமைப்புகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம், ஆர்ப்பாட்டத்தை நாள்தோறும் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் அரசு சட்டப்பேரவையைக் கூட்டி 3 மசோதாக்களை நேற்று நிறைவேற்றியது. பஞ்சாப் அரசு சட்டப்பேரவையில் மசோதாக்களை நிறைவேற்றிய சில மணி நேரத்தில் ராஜஸ்தான் அரசும், சட்டப்பேரவையில் இதேபோன்று மசோதாக்கள் கொண்டு வந்து நிறைவேற்றுவோம் என அறிவித்தது.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “சோனியா காந்தி, ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி நமக்கு உணவு வழங்கும் விவசாயிகளுக்காக முழுமையாகத் துணை நின்று, தேசிய ஜனநாயகக் கூட்டணி நிறைவேற்றிய விவசாயிகளுக்கு எதிரான சட்டத்தை எதிர்க்கும். இன்று பஞ்சாப் காங்கிரஸ் அரசு மசோதாக்களை நிறைவேற்றியுள்ளது. அதைத் தொடர்ந்து ராஜஸ்தான் அரசும் வேளாண் சட்டங்களுக்கு எதிரான மசோதாக்களை நிறைவேற்றும்” எனத் தெரிவித்தார்.

முன்னதாக, காங்கிரஸ் கட்சி எந்தெந்த மாநிலங்களில் ஆட்சியில் இருக்கிறதோ அங்கு, மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக மசோதாக்களைத் தாக்கல் செய்து நிறைவேற்றிட அறிவுறுத்தியது.

முதல்வர் அசோக் கெலாட் அறிவிப்பைத் தொடர்ந்து, அமைச்சரவைக் கூட்டம் நேற்று இரவு அவரது இல்லத்தில் நடந்தது. அப்போது மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக மசோதாக்களைக் கொண்டுவருவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து சிறப்புக் கூட்டத்தொடரை விரைவில் கூட்டி, விவசாயிகளின் நலன்களைக் காக்கும் பொருட்டு இந்தச் சட்டங்களுக்கு எதிராக மசோதாக்களை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது. குறைந்தபட்ச ஆதார விலை தொடர்ந்து விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள தடை நீக்கத்தை எதிர்த்துள்ள ராஜஸ்தான் அரசு, இருப்பு வைப்பதில் கட்டுப்பாடு இல்லை என்றால், பெரும் வணிகர்கள் அத்தியாவசியப் பொருட்களைப் பதுக்கினால் அது விலை உயர்வுக்குக் காரணமாகிவிடும். ஆதலால், அத்தியாவசியப் பொருட்கள் இருப்பு வைப்பதில் கட்டுப்பாடு கொண்டுவரப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.

SCROLL FOR NEXT