லோக் ஜனசக்தி கட்சியின் (எல்ஜேபி) தலைவரும், மத்திய அமைச்சராக பதவி வகித்தவருமான ராம் விலாஸ் பாஸ்வான் உடல்நலக்குறைவால் டெல்லி மருத்துவமனையில் கடந்த 8-ம் தேதி காலமானார்.
பாஸ்வானின் மறைவுக்கு சில நாட்களுக்கு முன், “எதிர்வரும் பிஹார் தேர்தலில் எல்ஜேபி தனித்துப் போட்டியிடும். தேசிய அளவில் மட்டும் பாஜகவுடன் கூட்டணி தொடரும்” என அவரது மகன் சிராக் பாஸ்வான் அறிவித்தார். ஆனால் பிஹார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதிஷ்குமார், மத்தியிலும் என்டிஏவில் இருந்து எல்ஜேபியை நீக்க வேண்டும் என தொடர்ந்து பாஜகவிடம் வலியுறுத்தி வருகிறார். இந்தப் பிரச்சினையில் மவுனம் காக்கும் பாஜக, பிஹார் தேர்தலுக்கு பின் சிராக் பாஸ்வானுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் அளிப்பது தொடர்பாக முடிவெடுக்க உள்ளது.
இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த வாரம் இந்தி ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், “பிஹாரில் போதுமான தொகுதிகள் ஒதுக்கியும் எல்ஜேபி தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளது. ஆனால், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அக்கட்சி மீண்டும் எங்களுடன் இணையும் வாய்ப்புள்ளது” என்று கூறியிருந்தார். இதனால் பாஜகவின் திட்டத்தில் ஒன்றாகவே பிஹாரில் எல்ஜேபி தனித்துப் போட்டியிடுவதாக சர்ச்சை உள்ளது.
பிஹாரில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளம் 122, பாஜக 121 எனப் பிரித்துக் கொண்டன. இதில் என்டிஏவில் புதிதாக சேர்ந்துள்ள ஜிதன் ராம் மாஞ்சியின் கட்சிக்கு ஐக்கிய ஜனதா தளம் தனது பங்கிலிருந்து 7 தொகுதிகளைத் தருகிறது. விகாஷீல் இன்ஸான் கட்சிக்கு பாஜக தனது பங்கில் இருந்து 6 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது.
143 தொகுதிகளில் போட்டியிடும் எல்ஜேபி, நிதிஷ் கட்சியை விட அதிகமாக 28 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் பாஜகவையும் எதிர்த்து வேட்பாளர்களை நிறுத்தும் கட்டாயம் சிராக் பாஸ்வானுக்கு ஏற்பட்டுள்ளது. இதன் தொடக்கமாக பாகல்பூர், ரகோபூர், கோவிந்த்கன்ச், ரோஸ்ரா, லால்கன்ச் ஆகிய 5 தொகுதிகளில் பாஜகவுக்கு எதிராக எல்ஜேபி வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
இவற்றில் ஒன்றான ரகோபூரில் எல்ஜேபி வேட்பாளரால் அங்கு ராஷ்ட்ரிய ஜனதா தளம் சார்பில் போட்டியிடும் லாலுவின் மகன் தேஜஸ்வி பிரசாத் பலன் அடையும் வாய்ப்புகள் உள்ளன.
இதனால், தேர்தலின் முடிவுகளை பொறுத்து சிராக், மெகா கூட்டணியில் சேர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதுபோல், பதவிக்காக அணி மாறும் வழக்கம் சிராக்கின் தந்தை ராம்விலாஸ் பாஸ்வானிடம் இருந்தது தான் என்பது பிஹார்வாசிகளின் கருத்தாக உள்ளது.