காஷ்மீர் கோயிலிலிருந்து சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த துர்க்கை அம்மன் சிலையை மத்திய அரசிடம் ஜெர்மனி அரசு நேற்று ஒப்படைத்தது.
இந்தியா வந்துள்ள ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் பிரதமர் மோடியை நேற்று சந்தித்துப் பேசினார். பின்னர் இந்த சிலையை அவரிடம் ஒப்படைத்தார். ஜெர்மனி யின் ஸ்டட்கர்ட் அருங்காட்சிய கத்தில் இந்த சிலை இருந்தது கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தெரியவந்தது. இதையடுத்து இதை திருப்பித் தருமாறு இந்தியா கேட்டுக் கொண்டது.
சிலையை திருப்பிக் கொடுத்த தற்கு ஏஞ்சலாவுக்கும் அந்நாட்டு மக்களுக்கும் பிரதமர் மோடி நன்றி தெரிவித்துக்கொண்டார். அப்போது அவர் கூறும்போது, “காணாமல் போன இந்த சிலை, தீய சக்தியை வெற்றி கொண்டதன் நினைவுச் சின்னம் ஆகும்” என்றார்.
மகிஷாசுரமர்தினி அவதாரத்தில் உள்ள இந்த சிலை, காஷ்மீரின் புல்வாமா நகரில் உள்ள கோயிலிலிருந்து கடந்த 1990-களில் காணாமல் போனது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த சிலை ஸ்டட்கர்ட் அருங்காட்சியகத்தில் இருப்பதாக இந்திய அரசின் தொல்பொருள் ஆய்வுத் துறைக்கு 2012-ல் ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இந்த சிலையை மீட்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.