தாய்மொழி கல்விக்குக் கூடுதல் முக்கியத்துவம் வழங்குவதே இந்த கல்விக் கொள்கையின் நோக்கம் என்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
இராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது:
நாம் மரணிக்கும் வரை கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் என்றும், அனுபவம் வாய்ந்த உலகமே சிறந்த கல்வியாளர் என்றும் சுவாமி விவேகானந்தா எப்போதும் கூறுவார்.
முன் காலத்தில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் நாலந்தா மற்றும் தக்சசீலா உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் அறிவியல் மற்றும் கலை சார்ந்த படிப்புகளைப் பயில ஆர்வம் காட்டினர்.
வசுதேவ குடும்பகம் என்ற இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையுடன், சுவாமி விவேகானந்தாவின் குறிக்கோள் ஒத்திருந்தது. தற்போதைய காலகட்டத்தில் அனுபவத்துடன் கூடிய கல்விக்கு முன்னுரிமை வழங்கும் கல்விக் கொள்கை இதனுடன் பொருந்தி இருக்கிறது.
அனுபவ ரீதியான கல்வியை வழங்கும் நோக்கத்துடனே, மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கை 2020ஐ உருவாக்கியுள்ளது. . கல்வியை தேசிய மற்றும் சர்வதேச மயமாக்குவதுடன் முழுமையானதாக மாற்றும் முயற்சியிலும், இதுகுறித்த சுவாமி விவேகானந்தரின் குறிக்கோளை நிறைவேற்றும் வகையிலும் தேசியக் கல்விக் கொள்கை 2020 வடிவமைக்கப்பட்டு உள்ளது.
சுவாமி விவேகானந்தா குறிப்பிட்டதைப் போல அறிவியல் துறையில் போதிய கல்வியைப் போதிக்கும் வகையிலும், புதுமையான கண்டுபிடிப்புகளுக்குப் போதிய முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும் இந்த தேசிய கல்விக் கொள்கையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
தாய்மொழி கல்விக்குக் கூடுதல் முக்கியத்துவம் வழங்குவதே இந்த கல்விக் கொள்கையின் நோக்கம், என்றார் அவர்.