மத்தியப் பிரதேசத்தில் துர்க்கைக்கு கோயில் கட்டி வழிபடும் முஸ்லிம் பெண்ணின் பக்தியை அப்பகுதி வாசிகள் மிகவும் மெச்சுகின்றனர்.
ம.பி.யின் மண்டசர் மாவட்டம், இந்திரா நகர் பகுதியில் வசிப்பவர் சுக்ரா பீ (45). இவர் 3 ஆண்டு களுக்கு முன் இப்பகுதியில் தனது சொந்த முயற்சியால் `சிட்லமாதா மந்திர்’ என்ற பெயரில் துர்க்கை அம்மனுக்கு கோயில் கட்டியுள்ளார்.
அன்றுமுதல் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி விழாவில் நாள் தவறாமல் கலந்துகொள்ளும் சுக்ரா பீ, துர்க்கையை போற்றி பக்திப் பாடல்கள் பாடுகிறார். மேலும் விழாவின் 8-வது நாளில் அஷ்டமி விரதம் இருக்கிறார். அவரது பக்தியை அப்பகுதி இந்துக்கள் மிகவும் போற்றுகின்றனர்.
இதுகுறித்து சுக்ரா பீ கூறும் போது, 10 - 15 ஆண்டுகளாக நான் துர்க்கையை வழிபட்டு வருகிறேன். தொடக்கத்தில் எங்கள் பகுதியில் நடைபாதையில் வைக்கப்பட்டி ருந்த துர்க்கையை வழிபட்டு வந்தேன். ஒருநாள் துர்க்கை எனது கனவில் வந்து தனக்கு ஒரு கோயில் கட்டுமாறு என்னை பணித்தாள்” என் கிறார். மாதம் ரூ.4000 சம்பாதிக்கும் தொழிலாளியான சுக்ரா பீ, 3 குழந்தைகளுக்கு தாய் ஆவார்.
இவரது கணவர் இஸ்மாயில் கான், வெல்டராக பணிபுரிகிறார். அவர் கூறும்போது, “கோயில் கட்ட ரூ.27 ஆயிரம் நன்கொடை வசூலித்தோம். பிறகு உள்ளூர் எம்எல்ஏ ரூ.1 லட்சம் அளித்தார். இத்தொகையில் 3 ஆண்டுகளுக்கு முன் கோயிலை கட்டி முடித்தோம்” என்றார்.