இந்தியா

பண்டிகைக் காலத்தில் கரோனா முன்னெச்சரிக்கை: குஜராத் துணை முதல்வருடன் ஹர்ஷ வர்த்தன் ஆலோசனை

செய்திப்பிரிவு

பண்டிகைக் காலத்தில் பிரதமர் அறிவித்த கோவிட்டுக்கு எதிரான மக்கள் இயக்கத்தை செயல்படுத்துவது தொடர்பாக குஜராத் மாநிலத் துணை முதலமைச்சர் நிதின்பாய் பட்டேலுடன் ஹர்ஷ வர்தன் ஆலோசனை நடத்தினார்.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், குஜராத் மாநிலத் துணை முதல்வர் நிதின்பாய் படேல், மாநிலத்தின் சுகாதார மற்றும் மருத்துவக் கல்வி அமைச்சர், மற்றும் அதிகாரிகள் ஆகியோருடன் இன்று ஆலோசனை நடத்தினார்.

கரோனா பரவல் காலத்தில் பத்தாவது மாதத்தில் நாடு தற்போது இருப்பதை நினைவு கூர்ந்த அமைச்சர் டாக்டர் ஹர்ஷ வர்தன், "சுமார் ஒரு மாத காலமாக தற்போது பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை பத்து லட்சத்தில் இருந்து இப்போது 7,72,000-மாகக் குறைந்திருக்கிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 55722 பேருக்கு புதிதாக நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 66 ஆயிரத்து 399 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நோய் பரவல் இரட்டிப்பாகும் நாட்கள் 86.3-ஆகக் குறைந்துள்ளது.

மிக விரைவில் நாட்டின் பரிசோதனை எண்ணிக்கை 10 கோடி அளவை எட்டும்" என்று தெரிவித்தார்.

குஜராத் மாநிலத்தில் கரோனா பரவல் தடுப்பு முறை குறித்து பேசிய அமைச்சர் டாக்டர் ஹர்ஷ வர்தன், அதிகமானோர் பாதிக்கப்பட்ட மாநிலங்களுள் ஒன்றாக இருந்த குஜராத், அதிலிருந்து மீண்டு, தற்போது 90.57 சதவிகிதம் பேர் குணமடைந்து இருப்பதாகக் கூறினார்.

எதிர்வரும் குளிர்காலம் மற்றும் நீண்ட பண்டிகைக் காலங்களில் நோய்த்தொற்றின் பரவல் அதிகரிக்கக்கூடும் என்று எச்சரித்த அவர், "அடுத்த மூன்று மாதங்களுக்கு நாம் அனைவரும் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது மற்றும் அடிக்கடி கை கழுவுவது என்ற பிரதமரின் அறிவுரை, நாட்டின் கடைசி குடிமகனையும் சென்றடைய வேண்டும். கோவிட் சரியான நடத்தை முறையைப் பின்பற்றுவது எளிதானது" என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT