தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா : கோப்புப்படம் 
இந்தியா

அரசியல்ரீதியாக நடந்த போரில் தோற்றதால் பரூக் அப்துல்லாவைக் குறி வைக்கிறது பாஜக: தேசிய மாநாட்டுக் கட்சி கண்டனம்

பிடிஐ

அரசியல்ரீதியான போரில் மோதி பரூக் அப்துல்லாவிடம் தோற்றபின், இப்போது விசாரணை அமைப்புகள் மூலம் அவரை பாஜக அரசு குறிவைக்கிறது என்று தேசிய மாநாட்டுக் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் அமைப்பில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்தது தொடர்பாக தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லாவுக்கு அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சம்மன் அனுப்பினர். முதல் கட்டமாக விசாரணையும் நடத்தியுள்ளனர்.

விசாரணையில் பரூக் அப்துல்லாவிடம் பெறும் வாக்குமூலம், சட்டவிரோத பணப் பரிமாற்றச் சட்டத்தில் பதிவு செய்யப்பட உள்ளன.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது குறித்தும் குப்கார் தீர்மானம் குறித்தும் கடந்த வாரம் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் ஆலோசனை நடத்தினர். அதன் எதிரொலியாக அமலாக்கப் பிரிவு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தேசிய மாநாட்டுக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து தேசிய மாநாட்டுக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

''அரசியல்ரீதியாக நடந்த போரில் பரூக் அப்துல்லாவிடம் பாஜக தோற்றுவிட்டது. அதனால், அரசு விசாரணை அமைப்புகள் மூலம் அவரை இப்போது குறிவைக்கிறது பாஜக அரசு. குப்கார் தீர்மானத்துக்கான மக்கள் கூட்டணியில் ஜம்மு காஷ்மீரில் அனைத்துக் கட்சிகளையும் திரட்டும் பரூக் அப்துல்லாவின் முயற்சிக்கு எதிர்வினையாகவே அமலாக்கப் பிரிவு இந்தச் சம்மனை அனுப்பியுள்ளது தெளிவாகத் தெரிகிறது.

பாஜகவின் சித்தாந்தங்கள், பிரிவினைவாத அரசியலை எதிர்ப்பவர்களுக்குக் கிடைக்கும்விலை இதுதான். நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களைத் தம்மிடம் பணிய வைப்பதற்காக பல்வேறு துறைகள் மூலம் பாஜக அரசு அச்சுறுத்திய சம்பவங்கள் கடந்த கால வரலாற்றில் நடந்தது. அதில் ஒருபகுதிதான் இன்று அமலாக்கப் பிரிவு பரூக் அப்துல்லாவுக்குச் சம்மன் அனுப்பியது.

அமலாக்கப் பிரிவு சம்மன் அனுப்பிய நேரம் தெளிவாக இருக்கிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி, அதாவது பாஜக அரசு 370-வது பிரிவை ரத்து செய்த அன்று இதேபோன்று அமலாக்கப் பிரிவு பரூக் அப்துல்லாவுக்குச் சம்மன் அனுப்பியது.

தற்போது குப்கர் தீர்மானத்துக்கான மக்கள் கூட்டணியை பரூக் அப்துல்லா அமைத்த சில நாட்களில் இந்தச் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. பரூக் அப்துல்லா குற்றமற்றவர். அவர் விசாரணை அமைப்புகளுக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குவார்''.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ ஜம்மு காஷ்மீரில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஓர் அணியில் திரண்டு ஒற்றுமையாகிவிட்டதால், மத்திய அரசு அச்சமடைந்து, பதற்றப்பட்டு, பரூக் அப்துல்லாவுக்கு உடனடியாக அமலாக்கப்பிரிவு மூலம் சம்மன் அனுப்பியுள்ளது. அரசியல்ரீதியாக பழிவாங்கும் இந்தச் செயல், எங்கள் உரிமைக்காக நடக்கும் போராட்டத்தில் எங்கள் தீர்மானத்தை மழுங்கடிக்காது” எனத் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT