கண்ணூர் விமானநிலையத்திலிருந்து புறப்படும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி : படம்ஏஎன்ஐ 
இந்தியா

3 நாட்கள் பயணமாக வயநாடு சென்றார் ராகுல் காந்தி: நிலச்சரிவில் பெற்றோரை இழந்த சகோதரிகளுக்கு புதிய வீடு வழங்கினார்

பிடிஐ

கேரளாவின் வயநாடு தொகுதியில் ஏற்பட்டுள்ள கரோனா வைரஸ் பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக அந்தத் தொகுதியின் எம்.பியும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான ராகுல் காந்தி 3 நாட்கள் பயணமாக இன்று அங்கு சென்றார்.

வயநாடு தொகுதிக்கு 3 நாட்கள் பயணமாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று நண்பகல் தனிவிமானம் மூலம் கண்ணூர் சென்றடைந்தார். விமானநிலையத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் முள்ளப்பள்ளி ராமச்சந்திரன், மாநில எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ராகுல் காந்தியை வரவேற்றனர்.

அங்கிருந்து புறப்பட்ட ராகுல் காந்தி, மலப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். மலப்புரம் மாவட்டத்தில் கரோனாவில் பாதிக்கப்பட்டவர்கள் விவரம், சிகிச்சையில் இருப்போர், தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றை மாவட்டஆட்சியர், சுகாதாரத்துறை, மருத்துவத்துறை அதிகாரிகளிடம் ராகுல் காந்தி கேட்டறிந்தார்.

மலப்புரம் மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி 1,399 பேரும், சனிக்கிழமை 1519 பேரும், வெள்ளிக்கிழமை 1025 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மலப்புரம் மாவட்டம் கவலப்பாறையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட நிலச்சரிவில் 110 பேர் உயிரிழந்தனர். இந்த நிலச்சரிவில் பெற்றோரை இழந்த இரு சகோதரிகள் காவ்யா, கார்த்திகா ஆகியோருக்காக காங்கிரஸ் சார்பில் கட்டப்பட்ட புதிய வீட்டின் சாவியை ராகுல் காந்தி வழங்கினார். அங்கிருந்து கல்பேட்டா அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்ற ராகுல் காந்தி அங்கு ஓய்வு எடுத்து இரவு தங்குகிறார்.

நாளை( 20-ம் தேதி) ராகுல் காந்தி வயநாடு புறப்படுகிறார். வயநாடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்பு குறித்து ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்கும் ராகுல் காந்தி, திஷா குழுவிடமும் ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்தக் கூட்டத்தை முடித்துக்கொண்டு அன்று இரவு மீண்டும் கல்பேட்டா அரசு விருந்தினர் இல்லத்துக்கு ராகுல் காந்தி வருகிறார்.

21-ம் தேதியன்று காலை மனன்தாவடி அரசு மருத்துவமனைக்குச் சென்று ஆய்வு நடத்தும் ராகுல் காந்தி, அதை முடித்துக்கொண்டு கண்ணூர் விமான நிலையம் சென்று அங்கிருந்து புதுடெல்லி புறப்படுகிறார்

SCROLL FOR NEXT