பாஜக பெண் வேட்பாளரை பற்றி அவதூறாக பேசிய கமல்நாத் மீது நடவடிக்கை எடுக்காமல் நேரு குடும்பத்தினர் மவுனம் சாதிப்பது ஏன் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் டப்ரா சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தொகுதியில் பாஜக சார்பில் இமர்தி தேவி போட்டியிடுகிறார். இந்த தொகுதி குவாலியர் மாவட்டத்தில் இடம் பெற்றுள்ளது. குவாலியர் ராஜ குடும்பத்தைச் சேர்ந்த ஜோதிராதித்ய சிந்தியாவின் செல்வாக்கு மிக்க தொகுதியாகும்.
ஜோதிராதிய சிந்தியாவின் தீவிர ஆதரவாளரான இமர்தி தேவி, கடந்த 3 தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஜோதிராதித்ய சிந்தியாவுடன் சேர்ந்து பாஜகவில் அவர் இணைந்தார். தற்போது அதே தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.
இந்த தொகுதியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான கமல்நாத், இமர்தி தேவியை மிகவும் தரக்குறைவாக விமர்சனம் செய்தார். அவரை பாலியல் தொழிலாளியுடன் ஒப்பிட்டு பேசினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பாஜக தலைவர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியதாவது:
மத்திய பிரதேச மாநில பாஜக பெண் வேட்பாளர் இம்ரிதி தேவி குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் அவதூறாக பேசியுள்ளார். இதற்காக கமல்நாத் என்ன விளக்கம் அளித்தாலும் ஏற்க முடியாது. ஆனால் நேரு குடும்பத்தினர் இந் விவகாரத்தில் மவுனமாக உள்ளனர். கமல்நாத் மீது நடவடிக்கை எடுக்காமல் நேரு குடும்பத்தினர் மவுனம் சாதிப்பது ஏன்.’’ எனக் கூறினார்.