உத்திரப்பிரதேசம் பலியாவின் நியாயவிலை கடைகள் ஏலத்தின் போது ஒருவர் மாவட்ட துணை ஆட்சியர், டிஎஸ்பி முன்பாக சுட்டுக் கொல்லப்பட்டார். இதில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான பாஜக நிர்வாகி கைது செய்யப்பட்டு 15 நாள் நீதிமன்றக் காவல் அளிக்கப்பட்டுள்ளது.
உபியின் பலியாவின் துர்ஜான்பூரில் கடந்த 15 ஆம் தேதி அரசு நியாயவிலை கடைகளுக்கான ஏலம் நடைபெற்றது. இதில் எழுந்த மோதலில் பாஜக நிர்வாகியான தீரேந்திர பிரதாப் சிங் தனது போட்டியாளரான ஜெய் பிரகாஷ் பால் என்பவரை அரசு உரிமம் பெற்ற துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.
மாவட்ட துணை ஆட்சியரான சுரேஷ் பால், டிஎஸ்பி சந்திர பிரகாஷ் சிங் ஆகியோர் முன்னிலையில் சுட்ட பின் தீரேந்தர் அங்கிருந்து எந்த தடையும் இன்றி வெளியேறி இருந்தார். இந்த சம்பவம் உபியில் எதிர்கட்சிகளால் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.
இப்பிரச்சனையில், பாஜகவின் முன்னாள் ராணுவ வீரர்கள் பிரிவின் பலியா தலைவரான தீரேந்தர் உள்ளிட்ட 12 பேர் மீது வழக்கு பதிவாகி இருந்தது. தீரேந்தரை பிடிக்க துப்பு அளிப்போருக்கு உபி காவல்துறை சார்பில் ரூ.75,000 பரிசும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்து விசாரிக்கவும் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டிருந்தார். இதனால், உபி காவல்துறையின் சிறப்பு படை(எஸ்டிஎப்) 10 குழுக்கள் அமைத்து தீரேந்தரை தேடியது.
இந்நிலையில், எந்த அச்சமும் இன்றி தீரேந்தர் லக்னோவின் முக்கிய பகுதியில் உள்ள ஜானேஷ்வர் மிஸ்ரா பூங்காவில் நேற்று உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். இத்தகவல் அறிந்த எஸ்டிஎப் படையினர் தீரேந்தரை கைது செய்தனர்.
பிறகு தீரேந்தர் பலியாவிற்கு கொண்டு செல்லப்பட்டவர் இன்று காலை அதன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவர்
பலியா போலீஸார் விசாரணை 14 நாள் நீதிமன்றக்காவலில் அனுப்பப்பட்டுள்ளார்.
இதனிடையே, இவ்வழக்கில் குற்றவாளிக்கு ஆதரவாகப் பேசிய பாஜக எம்எல்ஏவான சுரேந்திரா நாத் சிங், தம் தற்காப்பிற்காக தீரேந்தர் துப்பாக்கியால் சுட்டதாகக் கூறியிருந்தார். இதிலும் சர்ச்சை எழுந்து எல்எல்ஏவான சுரேந்தரை பாஜகவின் மாநிலத் தலைமை லக்னோ அழைத்து எச்சரித்ததது.