மைசூரு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பேசிய காட்சி: படம் | ஏஎன்ஐ. 
இந்தியா

தேசத்தின் வளர்ச்சியை உறுதி செய்ய ஒவ்வொரு துறையிலும் அவசியமான சீர்திருத்தங்கள் செய்யப்படுகின்றன: பிரதமர் மோடி பேச்சு

பிடிஐ

தேசத்தின் வளர்ச்சியை உறுதி செய்ய ஒவ்வொரு துறையிலும் அத்தியாவசியமான மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த 10 ஆண்டுகளுக்கான இந்தியாவை உருவாக்கி வருகிறோம் என்று பிரதமர் மோடி பெருமித்தோடு தெரிவித்தார்.

மைசூர் பல்கலைக்கழகத்தின் 100-வது பட்டமளிப்புவிழா இன்று நடந்தது. காணொலி மூலம் பிரதமர் மோடி விழாவைத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் வாஜூபாய் வாலா, துணை முதல்வர் அஸ்வத் நாராயண் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:

''கடந்த 6 முதல் 7 மாதங்களாக நீங்கள் பார்த்திருக்கலாம். ஏராளமான சீர்திருத்தங்கள் விரைவாகச் செய்யப்பட்டு வருகின்றன. அது வேளாண்துறை, விண்வெளி, பாதுகாப்பு, விமானப் போக்குவரத்து, தொழிலாளர் துறை என அனைத்திலும் சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு வருகின்றன. தேசத்தின் வளர்ச்சிக்காக ஒவ்வொரு துறையிலும் அவசியமான சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

நாட்டில் உள்ள கோடிக்கணக்கான இளைஞர்களுக்காகவும், இந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சிக்காவும் இந்தச் சீர்திருத்தங்கள் செய்யப்படுகின்றன. நாம் அடித்தளம் வலுவாக அமைத்தால், இந்த 10 ஆண்டுகள் இந்தியாவுக்கானதாக மாற்ற முடியும். இளைஞர்களுக்கு அளப்பரிய வாய்ப்புகளை அளித்துள்ளோம்.

இதற்கு முன் இல்லாதவகையில், அனைத்துத் துறைகளிலும் தற்போது சீர்திருத்தங்கள் நடந்து வருகின்றன. கடந்த காலத்தில் முடிவுகள் எடுக்கப்பட்டிருந்தாலும் அவை கட்டுப்படுத்தப்பட்டவையாக இருந்தன. இப்போது கட்டுப்பாடுகள் இல்லை.

கடந்த 6 ஆண்டுகளாக பல்வேறு துறைகளில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கல்வித்துறையின் வளர்ச்சிக்காக தேசிய கல்விக் கொள்கை கொண்டுவரப்பட்டது. விவசாயிகளுக்கு அதிகாரம் வழங்க வேளாண் சட்டங்கள், தொழிலாளர் நலனுக்காகவும், தொழிற்சாலை நலனுக்காகவும் மாற்றங்கள் என அனைத்தும் தேசத்தின் வளர்ச்சிகாக எடுக்கப்பட்ட முடிவுகள்.

பொதுவழங்கல் துறையில் செய்யப்பட்ட நேரடி பணப் பரிமாற்ற முறை, ரியல் எஸ்டேட் துறையின் பாதுகாப்பிற்காக ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் போன்றவை கொண்டுவரப்பட்டன. வரிசெலுத்துவோரின் நலனுக்காக, அவர்கள் அதிகாரிகளின் தொந்தரவு இல்லாமல் வரிசெலுத்த ஜிஎஸ்டி கொண்டுவரப்பட்டது. அந்நிய நேரடி முதலீட்டில் சீர்திருத்தம், திவால் சட்டத்தில் சீர்திருத்தம் போன்றவை கடந்த காலத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளாகும்.

கடந்த 6 ஆண்டுகளாக தொடர்ச்சியாக எடுக்கப்பட்டுவரும் முயற்சிகளால் நாட்டின் கல்வி முறையில் கொண்டுவரப்பட்ட மாற்றம், 21-ம் நூற்றாண்டை நோக்கி மாணவர்கள் முன்னேற உதவியாக இருக்கும். குறிப்பாக உயர்கல்வித்துறையில் கட்டமைப்பு சீர்திருத்தங்களும், அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாட்டு வசதிகளும் செய்யப்படுகின்றன

உலக அளவில் கல்விக்கான மையமாக இந்தியா விளங்க வேண்டும், நம்முடைய இளைஞர்கள் சிறந்த போட்டியாளர்களாக மாற அனைத்து நிலைகளிலும் தரமான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக ஐஐடி, ஐஐஐடி, ஏஐஐஎம்ஸ் கல்வி நிறுவனங்கள் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளன.

புதிய உயர் கல்வி நிறுவனங்களைத் திறப்பதில் கட்டுப்பாடு இல்லாமல், நிர்வாகம், பாலின மற்றும் சமூகப் பங்களிப்பு, அதிகமான சுயாட்சி அதிகாரம் ஆகியவற்றையும் அரசு வழங்குகிறது.

மருத்துவக் கல்வியில் கொண்டுவரப்பட்ட சீர்திருத்தம் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்கிறது. புதிய தேசியக் கல்விக் கொள்கை கல்வித்துறையில் செய்யப்பட்டுள்ள சீர்திருத்தங்களுக்கு உந்துதலை வழங்கும்''.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT