இந்தியா

பாஜக பெண் வேட்பாளரை தரக்குறைவாக பேசிய கமல்நாத்: சிவராஜ் சிங் சவுகான் கடும் கண்டனம்; போராட்டம்

செய்திப்பிரிவு

பாஜக பெண் வேட்பாளரை தரக்குறைவாக பேசியது தொடர்பாக கமல்நாத்துக்கு மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் டப்ரா சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தொகுதியில் பாஜக சார்பில் இமர்தி தேவி போட்டியிடுகிறார். இந்த தொகுதி குவாலியர் மாவட்டத்தில் இடம் பெற்றுள்ளது. குவாலியர் ராஜ குடும்பத்தைச் சேர்ந்த ஜோதிராதித்ய சிந்தியாவின் செல்வாக்கு மிக்க தொகுதியாகும்.

ஜோதிராதிய சிந்தியாவின் தீவிர ஆதரவாளரான இமர்தி தேவி, கடந்த 3 தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஜோதிராதித்ய சிந்தியாவுடன் சேர்ந்து பாஜகவில் அவர் இணைந்தார். தற்போது அதே தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.

இந்த தொகுதியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான கமல்நாத், இமர்தி தேவியை மிகவும் தரக்குறைவாக விமர்சனம் செய்தார். அவரை பாலியல் தொழிலாளியுடன் ஒப்பிட்டு பேசினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பாஜக தலைவர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இதுபற்றி மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கூறுகையில், ‘‘இது இமர்தி தேவிக்கு மட்டுமல்ல, எம்.பி.யின் மகள்கள் சகோதரிகளுக்கும் ஏற்பட்ட அவமானம். இவ்வளவு காலம் காங்கிரஸில் பணியாற்றிய மகளுக்கு எதிராக கமல்நாத் இவ்வளவு மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். மக்கள் இதனை பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்’’ என்றார்.

இதனை கண்டித்து சிவராஜ் சிங் சவுகான் போராட்டமும் நடத்தினார்.

SCROLL FOR NEXT