நிதிஷ்குமார் மீது கோபம் இருந்தாலும்கூட கூட்டணி தர்மத்தை மதித்து என் மீது பாஜக வசைமாரி பொழிகிறது என்று லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் சிராக் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.
பிஹாரில் சட்டப்பேரவைத் தேர்தல் 3 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட வாக்குப்பதிவு 71 தொகுதிகளுக்குவரும் 28-ம் தேதி நடக்கிறது. நவம்பர் 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.
இந்த தேர்தலில் நிதிஷ்குமார், பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறிய லோக் ஜனசக்திகட்சி தனித்துப்போட்டியிடுகிறது. நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளத்துக்கு எதிராகச் செயல்பட்டு அந்த கட்சி போட்டியிடும் தொகுதிகளில் மட்டும் தங்களின் வேட்பாளர்களை நிறுத்தும் லோக் ஜனசக்தி கட்சி, பாஜக போட்டியிடும் தொகுதிகளில் பேட்பாளர்களை நிறுத்தவில்லை.
இருப்பினும் லோக் ஜனசக்தி கட்சி பிரதமர் மோடியின் பெயரையோ, படத்தையோ பிரச்சாரத்தில் பயன்படுத்தக்கூடாது என்று பாஜக உத்தரவிட்டுள்ளது. பிரதமர் மோடியின் மீதும், பாஜக மீதும் மதிப்பு வைத்துள்ள, லோக் ஜனசக்தி கட்சி்யின் தலைவர் சிராக் பாஸ்வான், பிஹார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறார்.
இந்த சூழலில் லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் சிராக் பாஸ்வான், ட்விட்டரில் பாஜகவின் செயல் பாடு குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார்.
அதில் “ எனக்கும் பிரதமர் மோடிக்கும் இருக்கும் உறவை அனைவருக்கும் காட்சிப்படுத்தும் வகையில் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. என் தந்தை மருத்துவமனையில் இருந்ததில் இருந்து இறுதிச்சடங்கு வரை ,எனக்காக பிரதமர் மோடி செய்ததை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன்.
ஆனால், பாஜகவுக்கும், எனக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளியே உண்டாக்கும் முயற்சியில் நிதிஷ்குமார் ஈடுபட்டுள்ளார்.
லோக் ஜனசக்தியுடன் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று ஒவ்வொரு நாளும் சான்றிதழ் அளிக்கும் வகையில் நடந்து கொள்ளும் தன்னுடைய கூட்டணிக் கட்சிக்கு நிதிஷ்குமார் நன்றி சொல்ல வேண்டும்.
என்னால் பிரதமர் மோடிக்கு எந்தவிதமான ஊசலாட்டமனநிலை வருவதற்கும் நான் விரும்பவில்லை. மோடி அவரின் கூட்டணி தர்மத்தை பின்பற்றட்டும். நிதிஷ்குமாரை மனநிறைவு செய்யும் வகையில் என்னைப்பற்றி எப்படி வேண்டுமானும் பேசட்டும், வசைமாரி பொழியட்டும். ஆனால், நான் மோடியின் வளர்ச்சி மந்திரத்தைதான் உச்சரிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
அடுத்தவாரம் முதல் பிரதமர் மோடி பிஹாரில் பாஜக, ஐக்கிய ஜனதாதளம் கட்சிகளை ஆதரித்து தேர்தல் பிர்சசாரம் செய்ய உள்ள நிலையில் சிராக் பாஸ்வான் இந்த கருத்தைத் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் நிதிஷ்குமார், பாஜக இடையே குழப்பத்தை உண்டாக்கும் வகையில் தேர்தலுக்குப்பின் லோக்ஜனசக்தி கட்சியும், பாஜகவும் இணைந்து ஆட்சிய அமைக்கப்போகின்றன என்று தெரிவித்து வருகிறார். இது பாஜக, ஐக்கிய ஜனதா தளம்கட்சி மூத்த தலைவர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.