இந்தியா

ஆங்கில வார இதழின் அட்டை படத்துக்கு மகாவிஷ்ணு போல ‘போஸ்’ கொடுத்த தோனி மீது நடவடிக்கை எடுக்க தடை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

பிடிஐ

ஆங்கில வார இதழின் அட்டை படத்துக்கு மகாவிஷ்ணு போல் ‘போஸ்’ கொடுத்த வழக்கில், கிரிக்கெட் அணி வீரர் மகேந்திர சிங் தோனி மீது குற்ற நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி வீரர் எம்.எஸ்.தோனி, ஆங்கில வார இதழுக்காக ‘போஸ்’ கொடுத்தார்.

இதழின் அட்டை பக்கத்துக் காக எடுக்கப்பட்ட அந்தப் புகைப்படத்தில் மகாவிஷ்ணு போல் தோனி சித்தரிக்கப் பட்டிருக்கிறார். அத்துடன் கைகளில் குளிர்பானம், சிப்ஸ் போன்ற பொருட்களை வைத் துள்ளார். அவற்றில் ஷூவும் ஒன்று. விளம்பரத்துக்காக கொடுக்கப்பட்ட அந்த ‘போஸ்’ மத உணர்வுகளை புண்படுத்துவதாக உள்ளது என்று கூறி கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சமூக சேவகர் ஜெயகுமார் ஹிராமத் என்பவர் வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கை விசாரித்த கூடுதல் தலைமை மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட், தோனி மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கில் நேரில் ஆஜராக தோனிக்கு நீதிபதி சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தோனி மனு தாக்கல் செய்தார். ஆனால், தோனி மீது வழக்கு பதிவு செய்து குற்ற நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து உச்ச நீதி மன்றத்தில் தோனி மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை நீதிபதிகள் பினாகி சந்திர கோஷ், ஆர்.கே.அகர்வால் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித் தது. பின்னர் தோனி மீது குற்ற நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தர விட்டனர்.

SCROLL FOR NEXT