இந்தியா

உ.பி பலாத்கார வழக்கு: சிபிஐ விசாரணைக்கு அகிலேஷ் அரசு ஒப்புதல்; குற்றவாளிகளை மக்கள் முன் தூக்கிலிட பெற்றோர் கோரிக்கை

செய்திப்பிரிவு

உத்தர பிரதேச மாநிலத்தில் இரண்டு சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்ட சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட பரிந்த்துரை செய்வதாக அம் மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

இதனிடையே குற்றவாளிகளை மக்கள் முன் தூக்கிலிட வேண்டும் என்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.

உத்தர பிரதேசத்தில் உள்ள படான் மாவட்டத்தின், 2 சிறுமிகள் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு, ஊரின் மத்தியில் இருந்த மரத்தில் தூக்கிட்டு கொல்லப்பட்டனர். இந்த கோர சம்பவம் தேசத்தையே அதிர்ச்சியைடைய செய்துள்ளது.

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு அகிலேஷ் தலைமையிலான மாநில அரசு ஒப்புதல் அளித்து, அதற்காக பரிந்துரைத்துள்ளது. இது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய அனைத்து நடவடிக்கையையும் உத்தர பிரதேச அரசு செய்து வருவதாக அந்த அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில், இதுவரை, 2 போலீசார் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை பொது இடத்தில் தூக்கிலிட வேண்டும் என்றும் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரும், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியும் முன்னதாக கோரிக்கை விடுத்தனர்.

பதான் மாவட்டம் கத்ரா என்ற கிராமத்தை சேர்ந்த 14 மற்றும் 15 வயது சிறுமிகள் கடந்த செவ்வாய்க்கிழமை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டனர்.

இச்சம்பவம் துரதிருஷ்டவசமானது எனத் தெரிவித்த முதல்வர் அகிலேஷ் யாதவ், பாதிக்கப்பட்ட 2 சிறுமிகளின் குடும்பத்துக்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்தார். ஆனால் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர், அகிலேஷ் யாதவ் தலைமையிலான அரசு அறிவித்த ரூ.5 லட்சம் நிவாரண நிதியை நிராகரித்தனர்.

மேலும், "குற்றவாளிகள் அனைவரையும் மக்கள் முன்னே தூக்கிலிட வேண்டும். எங்கள் பிள்ளைகள் ஊர் மக்கள் முன்னே மரத்தில் தொங்கவிடப்பட்டிருந்தனர். அது போல அவர்களை மக்கள் முன் தண்டிக்க வேண்டும்” என்றும் சிறுமிகளின் பெற்றோர் வலியுறுத்தியிருந்தனர்.

பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இத்தகவல் குறித்து அறிந்த காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் சோகத்தை 15 நிமிடத்திற்கும் மேலாக கேட்ட ராகுல் சிறுமிகள் பலாத்காரம் செய்து தொங்கவிடப்பட்ட இடத்தையும் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தினார்.

SCROLL FOR NEXT