ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாலியல் பலாத்கார சம்பவத்தில் படுகாயம் அடைந்த 9 வயது சிறுமியை அவரது தந்தை தினமும் மருத்துவமனைக்கு 4 கி.மீ. தூக்கிச் செல்லும் செய்தி அண்மையில் வெளியானது. இதையடுத்து அச்சிறுமியின் குடும்பத்துக்கு பலர் உதவ முன்வந்துள்ளனர்.
ஜார்கண்ட் மாநிலத்தின் கிழக்கு சிங்பும் மாவட்டத்தில் போக்குவரத்து வசதியில்லாத ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் இச்சிறுமி. கடந்த ஜூலை மாதம் உள்ளூர் நபர் ஒருவரால் ஆசை வார்த்தைகள் காட்டி வெளியே அழைத்துச் செல்லப்பட்டு பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
மருத்துவ சிகிச்சைக்குப் பின் அவரது உடல்நிலை தற்போது சீராக இருந்தாலும் காயங்களுக்கு கட்டுப்போட அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அவ்வப்போது செல்லவேண்டியுள்ளது. சொந்த சைக்கிளுக்கு கூட வசதியில்லாத அவரது தந்தை, மருத்துவ சிகிச்சைக்காக 4 கி.மீ. தொலைவுக்கு தனது மகளை தூக்கிச் சென்று வந்தார்.
இச்செய்தி ஊடகங்களில் வெளியான பிறகு, அச்சிறுமியின் பெயரில் தொடங்கப்பட்ட வங்கிக் கணக்கில் பல லட்சம் ரூபாய் நன்கொடை வந்துள்ளது. கடந்த வியாழக்கிழமை 200-க்கும் மேற்பட்டோர் அச்சிறுமிக்கு உதவ முன்வந்தனர். இதனால் அவரது குடும்பத்தில் நம்பிக்கை துளிர்த்துள்ளது.
மெதந்தா குழுமத்தின் முன்னணி மருத்துவமனை ஒன்று அச்சிறுமிக்கு சிகிச்சை அளிக்க முன்வந்தது. இங்கு சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சேதமடைந்த பகுதிகள் முற்றிலும் சரிசெய்யப்பட்டுள்ளது. சிறுமியின் குடும்பத்துக்கு உடனடியாக ரூ.1 லட்சம் வழங்கவும் வழக்கை தொடர்ந்து கண்காணிக்கவும் அரசுக்கு ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறுமியின் தந்தைக்கு சைக்கிளும் வேலைவாய்ப்பும் வழங்குவதாக உள்ளூர் நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.
சிறுமியை பலாத்காரம் செய்த உள்ளூர் நபரை போலீஸார் கைது செய்தனர். மற்றொரு பலாத்கார வழக்கிலும் அவர் ஈடுபட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த 2014-ம் ஆண்டில் 1050 பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடந்துள்ளதாக தேசிய குற்ற ஆவணங்கள் காப்பகத்தின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.