மத்தியப் பிரதேச மாநிலத்தில் உணவு விடுதி ஒன்றில் காஸ் சிலிண்டர் வெடித்ததால் அதை யொட்டிய கட்டிடத்தில் இருந்த வெடிமருந்துகள் தீப்பிடித்து வெடித்துச் சிதறின. இதில் 89 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
ஜபுவா மாவட்டம் பெடல்வாட் நகரில், மக்கள் நடமாட்டம் அதிக முள்ள பஸ் நிலையம் அருகே நேற்று காலை 8.30 மணி அளவில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்தது.
காயம் அடைந்தவர்கள் சுற்றுவட்டார மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் 104 பேர் இறந்துவிட்டதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
3 மாடி கட்டிடத்தை ஒட்டி அமைந்திருந்த உணவு விடுதியில் முதலில் காஸ் சிலிண்டர் வெடித்தது. அதைத்தொடர்ந்து ராஜேந்திர கேசவா என்பவர் உரிமம் பெற்று கிணறு, சுரங்கம் தோண்ட பயன்படுத்தும் வெடிபொருட்கள் இருப்பு வைத்திருந்த கட்டிடத்துக்கு தீ பரவி அடுத்ததாக இன்னொரு விபத்து ஏற்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் வெடி மருந்து வைக்கப்பட்டிருந்த கட்டிடமும், அதை ஒட்டிய உணவு விடுதியும் முற்றிலும் இடிந்து தரைமட்டமா யின. மேலும் கட்டிடங்களும் அக்கம்பக்கத்து வீடுகளும் மோச மாக சேதம் அடைந்தன. ஏராள மான உடல்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல வாகனங்களும் தீப்பற்றி நாசம் அடைந்தன.
கட்டிட இடிபாடுகளில் இருந்து இதுவரை 89 உடல்கள் மீட்கப் பட்டுள்ளன. காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ள 100-க்கும் மேற்பட்டோ ருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படு வதாக தலைமை மருத்துவ அதிகாரி அருண் சர்மா தெரிவித்தார்.
சுரங்கப் பணிகளுக்காக பயன் படுத்தப்படும் வெடிபொருட்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் காலை 8.30 மணி அளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக காவல்துறை துணைக்கோட்ட அதிகாரி ஏ.ஆர் கான் தெரிவித்தார்.
மீட்புப் பணி
கட்டிட இடிபாடுகளில் சிக்கி யுள்ள சடலங்களை மீட்கும் பணி நடைபெறுகிறது. பரபரப்பான காலை நேரத்தில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள் ளதால், மேலும் பலர் இடிபாடு களில் சிக்கி இருப்பார்கள் என அஞ்சப்படுகிறது. மீட்புப் பணி நிறைவுற்ற பிறகே உயிரிழப்பு பற்றிய சரியான விவரம் தெரிய வரும்.
காவல்துறை கண்காணிப்பாளர், மூத்த அரசு அதிகாரிகள், மாநில பழங்குடிகள் நலத்துறை அமைச்சர் அந்தர் சிங் ஆர்யா உள்ளிட்டோர் ஜபுவாவிலிருந்து விபத்து நடந்த பகுதிக்கு விரைந்துள்ளனர்.
விபத்து தொடர்பாக உயர் நிலை விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளதாக மாநில உள்துறை அமைச்சர் பாபுலால் கவுர் தெரிவித்தார்.
இழப்பீடு அறிவிப்பு
இந்த சம்பவம் பற்றி வேதனை தெரிவித்துள்ள முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ 2 லட்சம், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் இழப்பீடு அறிவித்துள்ளார்.
சம்பவம் நிகழ்ந்த இடத்துக்கு செல்லும்படி அமைச்சருக்கு உத்தர விட்டுள்ளேன். இந்தி சம்மேளன நிகழ்ச்சியில் பங்கேற்பதை தவிர்த்து விட்டு வெடிவிபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை தருவதற்கான ஏற்பாடுகளை கவனிக்கும்படி அரசு முதன்மை செயலருக்கு அறிவுறுத்தி இருக்கி றேன் என்று முதல்வர் தெரி வித்தார்.
இதனிடையே, மீட்புப் பணிக்காக தேசிய பேரிடர் மீட்புப் படைப் பிரிவைச் சேர்ந்த குழுவினர் ஜபுவாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அனைத்து நவீன கருவிகளுடன் வந்துள்ள இவர்கள் உள்ளூர் நிர்வாகத்துக்கு மீட்புப் பணியில் உதவுவார்கள் என்று தேசிய பேரிடர் மீட்புப் படைப் பிரிவு தலைமை இயக்குநர் ஓ.பி.சிங் டெல்லியில் தெரிவித்தார்.
பிரதமர் இரங்கல்
இந்த துயர சம்பவம் தொடர் பாக அனுதாபம் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, ‘‘உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்த வர்கள் விரைவாக குணமடைய வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். நிலைமையை மத்தியப் பிரதேச அரசு உன்னிப்பாக கவனித்து செயல்பட்டு வருகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.