தெலங்கானா மாநிலத்தில் பொறி யியல் மாணவர் ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். ராகிங் கொடுமையல் அவர் இறந்தது, தற்கொலைக்கு முன் அவர் எழுதி வைத்த கடிதம் மூலம் தெரியவந்தது.
தெலங்கானா மாநிலம், ஆதிலாபாத் மாவட்டம், மஞ்சிராலா பகுதியை சேர்ந்தவர் சாய்நாத் (19). இவர் ஹைதராபாதில் உள்ள சி.எம்.ஆர். தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று காலை வாரங்கல் அருகே, வட்டே பல்லி எனும் இடத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
சடலத்தை ரயில்வே போலீஸார் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அப்போது மாணவரின் பேண்ட் பாக்கெட்டில் அவரது கடிதம் கிடைத்தது. அந்த கடிதத்தில்,
‘‘ராகிங்கை முற்றிலும் ஒழிக்க வேண்டும். இது குறித்து பல முறை கல்லூரி நிர்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. சீனியர்கள் மீது நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருந்தால், இன்று நான் உயிரோடு இருந்திருப்பேன்” என்று கூறப்பட்டுள்ளது.
தகவல் அறிந்த மாணவர் சங்கத்தினர், நேற்று கல்லூரி முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வாரங்கல் போலீஸார் வழக்கு பதிவு செய்து, ராகிங்கில் ஈடுபட்ட சீனியர் மாணவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்தில் குண்டூரில் நாகார்ஜுனா பல்கலைக்கழக பொறியியல் மாணவி ரித்திகேஷ்வரி ராகிங் கொடுமையால் தற்கொலை செய்து கொண்டார். கடந்த ஜூலை மாதம், வந்தரெட்டி (16) எனும் மாணவர், ராகிங் கொடுமையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.