உத்தரப் பிரதேசத்தில் கடந்த ஒரு வாரத்தில் பெண்களுக்கு எதிராக பலாத்காரம், கொலை உள்ளிட்ட 13 கொடுங்குற்றங்கள் நடந்துள்ளன. பெண்களுக்குப் பாதுகாப்பு கிடைக்காதது வேதனையாக இருக்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குறிப்பிட்டுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் ஹாத்ரஸ் மாவட்டத்தில் பட்டியலினத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்தச் சம்பவத்தில் மாநிலத்தில் ஆளும் பாஜக அரசையும், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலையையும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கடுமையாகச் சாடி வந்தார். பாதிக்கப்பட்ட அந்தக் குடும்பத்தினரின் வீட்டுக்குச் சென்ற பிரியங்கா காந்தி அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.
இந்தச் சூழலில் கடந்த 9-ம் தேதியிலிருந்து 15-ம் தேதி வரை மாநிலத்தில் பெண்களுக்கு எதிராக பலாத்காரம், கொலை, தற்கொலைக்குத் தூண்டுதல் என 13 கொடுங்குற்றங்கள் நடந்துள்ளன. ஆனால், பாஜக அரசு கிரிமினல்களுக்குப் பாதுகாப்பு அளிக்கிறது. பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத மாநிலமாக மாறிவிட்டது என்று பிரியங்கா காந்தி மாநில அரசைச் சாடியுள்ளார்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பெண்களுக்கு எதிராக பலாத்காரம், கொலை என 13 கொடுங்குற்றங்கள் உத்தரப் பிரதேசத்தில் நடந்துள்ளன. கிடைத்த தகவலின்படி, பாதிக்கப்பட்ட பெண்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். 4 பேர் தற்கொலை செய்துள்ளார்கள். பெண்களின் பாதுகாப்பு மிகவும் மோசமாக இருக்கும் சூழல் என்னை வேதனைப்படுத்துகிறது.
மாநில முதல்வருக்குச் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தை கூட்டி இதை விவாதிக்க நேரமில்லை. ஆனால், புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்க மட்டும் கூட்டத்தைக் கூட்டுகிறார்” எனத் தெரிவித்துள்ளார்.