மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் 89-வது பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டர் மூலம் கலாமுக்கு புகழாரம் சூட்டியுள்ளார். ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு காணொலி காட்சிகளாக ஓடுகிறது. இந்த வீடியோவில் பிரதமர் நரேந்திர மோடி, கலாமின் அருமை, பெருமைகளை விவரித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
கலாமின் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். நாட்டின் வளர்ச்சிக்கு கலாம் அளித்த பங்களிப்பை இந்தியா ஒருபோதும் மறக்காது. ஒரு விஞ்ஞானியாக, குடியரசுத் தலைவராக அவர் நாட்டுக்காக அரும் பணியாற்றியுள்ளார். அவரது வாழ்க்கை பயணம், கோடிக்கணக்கான மக்களுக்கு வழிகாட்டியாக அமைந்துள்ளது.
டாக்டர் கலாம், அனைவருக்கும் சிறந்த முன்னோடி. வாழ்க்கை பயணத்தில் ஒருவர் என்னென்ன செய்ய வேண்டும் என்பதற்கு கலாம் மிகச் சிறந்த முன்னுதாரணம். தனது தேவை, சூழலுக்கு ஏற்ப வாழ்க்கையை மாற்றியமைத்துக் கொண்டவர். மிகவும் எளிமையான மனிதர். மிக அபூர்வ குண நலன்களைக் கொண்டவர். உங்களை மக்கள் எவ்வாறு நினைவுகூர விரும்புகிறீர்கள் என்று ஒருமுறை அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த கலாம், என்னை ஆசிரியராக நினைவுகூருங்கள் என்றார்.
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.