மகாராஷ்டிர மாநிலம் மாலேகானில் 2008-ல் நடந்த குண்டுவெடிப்பில் 7 பேர் பலியாயினர். இவ்வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரித்து வருகிறது. இந்நிலையில் மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்றதும், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக மென்மையான போக்கை கடைப்பிடிக்குமாறு என்ஐஏ அதிகாரி ஒருவர் கூறியதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் ரோஹினி சாலியன் குற்றம்சாட்டினார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து, வழக்கை நேர்மையாக நடத்துவதற்காக உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும் எனக் கோரியும் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனுவை விசாரிக்கும் அமர்வில் இருந்து விலகுவதாக உச்ச நீதிமன்ற நீதிபதி யு..யு. லலித் தெரிவித்துள்ளார். இவ்வழக்கில் ஏற்கெனவே குறிப்பிட்ட குற்றம் சாட்டப்பட்டவருக்காக ஆஜராகி வாதாடியிருப்பதால்தான் விலகுவ தாக லலித் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து நீதிமன்ற அமர்வில் யார் யார் இடம்பெறுவது என்பது குறித்து தலைமை நீதிபதி முடிவு செய்வார்.