பிரதிநிதித்துவப் படம் 
இந்தியா

உ.பி.யில் மற்றொரு கூட்டு பலாத்காரம்: குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காததால் பாதிக்கப்பட்ட தலித் பெண் தற்கொலை: புகாரை பதிவு செய்யாத 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம்

ஆர்.ஷபிமுன்னா

உத்திரப்பிரதேசத்தில் மற்றொரு கூட்டு பலாத்காரத்தால் பெரும் பதட்டம் உருவாகி உள்ளது. இதன் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காததால் பாதிக்கப்பட்ட தலித் பெண் நேற்று தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

உ.பி.யின் பின்தங்கிய பகுதியான புந்தேல்கண்டில் உள்ளது சித்ரகுட் மாவட்டம். இதன் கரவுன் கிராமத்தில் வாழ்ந்த 15 வயது தலீத் பெண் அருகிலுள்ள அடர்ந்த காட்டிற்கு கொண்டு சென்று கடந்த அக்டோபர் 8-ம் தேதி மூவரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார்.

இதை அப்பெண் தனது வீட்டாரிடம் வந்து கூற உடனடியாகப் போலீஸில் புகார் செய்யப்பட்டது. இப்புகாரை பெற்ற போலீஸார் அப்பெண்ணிற்கு மருத்துவப் பரிசோதனை செய்யவில்லை.

வழக்கையும் முறையாகப் பதிவு செய்யாமல் விசாரிப்பதாகக் கூறி அனுப்பி வைத்துள்ளனர். இதன் பிறகும் காவல் நிலையத்தாரால் எந்த நடவடிக்கையும் இல்லாமல் போகவே பாதிக்கப்பட்ட பெண் மனம் உடைந்துள்ளார்.

இதனால், நேற்று காலை தன் குடும்பத்தார் வயல்வெளி பணிக்கு சென்றதும் தனியாக இருந்தவர் வீட்டில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை வீடு திரும்பியதும் பார்த்து அதிர்ந்த குடும்பத்தார் போலீஸாரிடம் புகார் செய்துள்ளனர்.

இதன் பிறகு நினைவு திரும்பிய வகையில் செயல்பட்ட உ.பி. போலீஸார் அதிரடியாக நடவடிக்கைகள் எடுத்து வழக்கு பதிவு செய்துள்ளனர். காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்றனர்.

அப்பெண்ணின் உடற்கூறு பரிசோதனைக்கு பின் உடலுக்கு இறுதிச்சடங்கு செய்ய அக்குடும்பத்தார் மறுத்தனர்.

இவ்வழக்கில் குற்றவாளிகளை கைது செய்வதுடன், விசாரணையில் சுணக்கம் காட்டிய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினர்.

இதன் பிறகு குற்றவாளிகளாக கரவுன் கிராமப் பஞ்சாயத்து தலைவர் மற்றும் இரண்டு சகாக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பலியானவர் 15 வயது சிறுமி என்பதால் இது போஸ்கோ பிரிவின் கீழ் மற்றும் வன்கொடுமை பிரிவிலும் வழக்குகள் பதிவாகி உள்ளன.

இவ்வழக்கில் அஜாக்கிரதையாக இருந்ததாக மாணிக்பூர் காவல்நிலைய ஆய்வாளர் ஜெய்சங்கர் சிங் மற்றும் சரய்யா கிராமக் கிளைக் காவல்நிலைய துணை ஆய்வாளர் அணில் சாஹு ஆகியோர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதையடுத்து இன்று காலை இறுதிச்சடங்கு முடிந்த வழக்கு ஹாத்ரஸ் சம்பவம் போல் சூடுபிடிக்கத் துவங்கி உள்ளது. செய்தி பரவி அரசியல் கட்சிகளும், தலித் சமூகப் பொதுநல அமைப்புகளும் சித்ரகுட்டில் முகாமிடத் துவங்கி உள்ளனர்.

SCROLL FOR NEXT