இந்தியா

தெலங்கானாவில் கனமழை; காம்பவுண்டு சுவர் இடிந்து 10 வீடுகள் மீது விழுந்தது: 2 மாத குழந்தை உட்பட 10 பேர் பலி

செய்திப்பிரிவு

தெலங்கானாவில் கனமழையால் காம்பவுண்டு சுவர் ஒன்று 10 வீடுகள் மீது இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இடிபாடுகளில் உடல்கள் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தெலங்கானா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும், ஆந்திராவின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

தெலங்கானாவில் கடந்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு 12 பேர் பலியாகியுள்ளனர். தெலங்கானாவின் 14 மாநிலங்கள் கனமழையினால் பாதிக்கப்பட்டுள்ளன.

ஐதராபாத்தில் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன, தெலுங்கானாவின் குறைந்தது 14 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

அம்மாநிலத்தின் ரங்கா ரெட்டி மாவட்டம் பெண்ட்லகுடா நகரத்தில் உள்ள முகமதியா ஹில்ஸ் பகுதியில் பெய்த கனமழை காரணமாக நேற்று இரவு 10 மணியளவில் அப்பகுதியில் இருந்த ஒரு வீட்டின் மீது காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்தது. இதனால், வீட்டின் அருகில் உள்ள வீடுகளில் தங்கியிருந்தவர்கள் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், இந்த விபத்தில் சிக்கி 2 மாத குழந்தை உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். மீட்கப்பட்ட பலரின் உடல்நிலைகவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என்று அஞ்சப்படுகிறது.

விபத்து நடந்த பகுதியில் ஐதராபாத் எம்.பி அசாசுதின் ஓவைசி பார்வையிட்டார். மேலும், மீட்பு நடவடிக்கைகளில் பேரிடர் மீட்புக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக சம்பவ இடத்திலிருந்த ஓவைஸி தன் ட்விட்டர் பக்கத்தில், “பெண்ட்லகுடாவில் உள்ள மொகமதியா ஹில்ஸ் பகுதியில் நான் இருந்தேன். இங்குதான் காம்பவுண்டு சுவர் இடிந்து விழுந்தது. இதில் 9 பேர் பலியாகியுள்ளனர், இருவர் காயமடைந்தனர். ஷம்ஷாபாத்தில் பேருந்து இல்லாமல் முடங்கிய பயணிகளுக்கு நான் லிப்டி கொடுத்தேன்.” என்று ட்வீட் செய்துள்ளார்.

கனமழை காரணமாக யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அதிகாரிகள் ஹைதராபாத்வாசிகளுக்குக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT