இந்தியா

பிரதமர் மோடி இன்று வாரணாசி பயணம்: மின்சக்தி, சாலை உள்ளிட்ட திட்டங்களை தொடங்கி வைக்கிறார்

பிடிஐ

பிரதமர் நரேந்திரமோடி தனது சொந்த தொகுதியான வாரணாசியில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணத்தின்போது, மின்சக்தி, சாலை தொடர்பான முக்கிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார். மேலும் பனாரஸ் இந்து பல்கலைக்கழக வளாகத்தில் மருத்துவமனையை திறந்து வைக்கும் மோடி, அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.

கடந்த ஆண்டு மே மாதம் பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் பிரதமர் வாரணாசி செல்வது மூன்றாவது முறையாகும். இதற்கு முன்பு கடந்த டிசம்பர் மாதம் 25-ம் தேதி அங்கு சென்றார். 9 மாதங்களுக்கு பிறகு இன்று வாரணாசிக்கு செல்லும் பிரதமரை வரவேற்க பாஜக தொண்டர்கள் பிரம்மாண்டமான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

இதற்கு முன்பு ஜூன் 28 மற்றும் ஜூலை 16 ஆகிய தேதிகளில் வாரணாசி செல்ல பிரதமர் மோடி திட்டமிட்டிருந்தார். ஆனால் பலத்த மழை காரணமாக இந்தப் பயணம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பிரதமரின் வருகையை முன்னிட்டு வாரணாசியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் போக்குவரத்தை சரி செய்யவும் போலீஸார் மற்றும் துணை ராணுவப் படையைச் சேர்ந்த ஏராளமானோர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT