மஞ்சுநாத் 
இந்தியா

மைசூரு தசரா விழாவை டாக்டர் தொடங்கி வைக்கிறார்: கரோனா தடுப்பு பணிக்காக கவுரவம்

செய்திப்பிரிவு

உலகப் புகழ் பெற்ற மைசூரு தசரா விழாவை இந்த ஆண்டு கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட மருத்துவர் மஞ்சுநாத் தொடங்கி வைக்கிறார்.

இதுகுறித்து மைசூரு மாவட்ட பொறுப்பு அமைச்சர் எஸ்.டி.சோமசேகர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கர்நாடகாவின் பாரம்பரிய, உலகப் புகழ் பெற்ற தசரா பண்டிகை வரும் 17‍-ம் தேதி தொடங்கி 26‍-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த ஆண்டு கரோனா வைரஸ் பரவல் காரணமாக மிகவும் எளிமையாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே வழக்கமாக 10 நாட்கள் நடக்கும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன‌.

அரண்மனை, சாமுண்டி மலையில் நடக்கும் நிகழ்வுகளில் பங்கேற்க பொது மக்கள், பத்திரிகையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மைசூரு தசரா விழாவை ஜெயதேவா இதய மருத்துவமனையின் இயக்குநர் மஞ்சுநாத் தொடங்கி வைக்கிறார். கடந்த 6 மாதங்களாக கரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டதற்காக அவரை கவுரவிக்கும் விதமாக முதல்வர் எடியூரப்பா இம்முடிவை எடுத்துள்ளார். வரும் 17‍-ம் தேதி சாமுண்டிமலையில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு மலர்கள் தூவி தசரா விழாவை மருத்துவர் மஞ்சுநாத் தொடங்கி வைக்கிறார்.

கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள‌ தூய்மை பணியாளர் மரிகம்மா, மருத்துவர் நவீன், செவிலியர் ருக்மணி, சுகாதாரத்துறை ஊழியர் நூர்ஜஹான், மைசூரு நகர காவலர் குமார், சமூக செயற்பாட்டாளர் ஆர்வலர் அயூப் அகமது ஆகியோர் கவுரவிக்கப்பட உள்ளனர். இவ்வாறு மஞ்சுநாத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT