ராஜீவ் பிரதாப் ரூடி மற்றும் ஷானாவாஸ் உசைன் - கோப்புப் படம் 
இந்தியா

பிஹார் சட்டப்பேரவை தேர்தல்: பாஜகவின் நட்சத்திரப் பிரச்சாரகர்கள் பட்டியலில் பிரதாப் ரூடி, ஷானாவாஸ் இடம்பெறவில்லை

ஆர்.ஷபிமுன்னா

பிஹாரின் சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவின் நட்சத்திரப் பிரச்சாரகர்கள் பட்டியல் இன்று வெளியாகி உள்ளது. இதில், அம்மாநிலத்தின் தேசிய தலைவர்களான ஷானாவாஸ் உசைன் மற்றும் ராஜீவ் பிரதாப் ரூடி ஆகியோர் பெயர்கள் இடம் பெறவில்லை.

பாஜகவின் முக்கிய முஸ்லிம் தலைவராகக் கருதப்படுபவர் ஷானாவாஸ் உசைன். இவர், பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் தொடர்ந்து மத்திய அமைச்சராக இருந்தவர்.

ஆனால், 2014 மக்களவை தேர்தலில் தோல்வி அடைந்தது முதல் ஷானாவாஸுக்கு பாஜகவில் இறங்கு முகம் தொடங்கியது. 2019 தேர்தலிலும் போட்டியிட அவருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.

எனினும், பெயரளவில் பாஜகவிற்காக தொலைக்காட்சி செய்தி விவாதங்களில் மட்டும் ஷானாவாஸ் தொடர்கிறார். இந்தவகையில் உச்சமாக பிஹாரின் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக நட்சத்திரப் பிரசாரகர்கள் பட்டியலில் ஷானாவாஸ் பெயர் இடம் பெறவில்லை.

பிஹாரில் உள்ள இரண்டு முக்கிய சமூகங்களாக இருப்பது முஸ்லிம் மற்றும் யாதவர்கள். இதில், முஸ்லிம் வாக்காளர்கள் இடையே ஷானாவாஸ் முக்கியப் பிரச்சாரகராகக் கருதப்பட்டார்.

இவரை போலவே பிஹாரின் மற்றொரு முக்கிய தலைவரான ராஜீவ் பிரதாப் ரூடியின் பெயரும் பாஜக பட்டியலில் விடுபட்டுள்ளது. கடந்த முறையின் பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவையில் உறுப்பினராக இருந்தார் ரூடி.

ஆனால், இந்தமுறை மீண்டும் அவர் பிஹாரின் சரண் தொகுதியில் வெற்றி பெற்றும் ரூடிக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படவில்லை. தேசிய செய்தி தொடர்பாளராக மட்டுமே உள்ளவருக்கு சொந்த மாநிலமான பிஹாரின் தேர்தலில் பிரச்சார வாய்ப்பு பாஜக தலைமையால் மறுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ‘‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் பிஹாரின் முத்த பத்திரிகையாளர் வட்டாரம் கூறும்போது, ‘ஷானவாஸ், ரூடிக்கு, பிஹார் முதல்வர் நிதிஷ்குமாருடன் ஏழாம் பொருத்தமாகப் போனதால் இருவரும் ஒதுக்கப்படத் துவங்கினார்.

இது பாஜகவின் மூத்த தலைவரும் துணை முதல்வருமான சுசில்குமார் மோடியுடனும் தொடர்ந்ததால் ஒதுக்குதல் தொடர்கிறது. எனினும், இவர்களை புறந்தள்ளுவதால் ஏற்படும் இழப்பை பாஜக உணர்வதாகத் தெரியவில்லை.’’ எனத் தெரிவித்தனர்.

இந்நிலையில், கடந்த மக்களவை தேர்தலில் இடம்பெற்ற அனைவரும் இம்முறையும் பாஜகவின் நட்சத்திரப் பிரச்சாரகர்கள் பட்டியலில் உள்ளனர். குறிப்பாக, உ.பி.யின் தலைவர்களான முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்கிற்கும் முக்கிய இடமளிக்கப்பட்டுள்ளது.

பிஹாரின் 243 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் இந்தமுறை அக்டோபர் 28, நவம்பர் 1 மற்றும் 7 தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது. இதன் முடிவுகள் நவம்பர் 10 இல் வெளியாகின்றன.

SCROLL FOR NEXT