உத்திரப்பிரதேசம் ஹாத்ரஸின் கூட்டு பாலாத்கார வழக்கை சிபிஐ விசாரிக்கத் துவங்கியுள்ளது. இதில், அம்மாநிலக் காவல்துறையினர் செய்த பல்வேறு தவறுகள் பெரும் சவாலாகி நிற்கின்றன.
ஹாத்ரஸின் பூல்கடி கிராமத்தை சேர்ந்த 19 வயது தலித் பெண் செப்டமர் 14 இல் கூட்டு பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டார். இதனால், ஹாத்ரஸின் சண்ட்பா காவல்நிலையத்தில் புகார் அளித்தவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பலாத்காரத்திற்கு பின் கடும் தாக்குதலுக்கும் உள்ளனவருக்கு ஏற்பட்ட படுகாயத்தால் அவர், அலிகர் முஸ்லிம் பல்கலைழகத்தின் ஜவகர்லால் நேரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இங்கு கிடைத்த சிகிச்சையும் பலனளிக்காமல் செப்டம்பர் 28 இல் டெல்லியின் சப்தர்ஜங் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இங்கு அவர் மறுநாளே உயிரிழந்தார்.
இந்த வழக்கை பதிவு செய்து விசாரித்த சண்ட்பா காவல்நிலையத்தார் பல்வேறு தவறுகளை செய்திருந்தது. அடுத்து உபியின் சிறப்புக் காவல்படையிடம் ஒப்படைக்கப்பட்ட பின்பும் பெரிய பலன் இல்லை.
இதனால், கிளம்பிய அரசியல் கட்சிகள் மற்றும் சமூகபொதுநல அமைப்புகளின் போராட்டத்தால் வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தனது விசாரணையை துவக்கி விட்ட சிபிஐயின் முன் உ.பி போலீஸார் செய்த பல தவறுகள் பெரும் சவாலாகி நிற்கின்றன.
முதலில் தாக்குதல் எனப் புகார் பதிவான பிறகும் குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்படவில்லை. இவர்களில் முக்கியக் குற்றவாளியான சந்தீப் 20 இல் கைது செய்யப்பட்டார்.
மற்ற மூன்று குற்றவாளிகளான ராமு என்கிற ராம்குமார், ரவி மற்றும் லவ்குஷ் ஆகியோர் செப்டம்பர் 23 மற்றும் 27 க்கு இடையே கைது செய்யப்பட்டனர். இம்மூவரும் முறையாக விசாரிக்காமலேயே சிறையில் தள்ளப்பட்டனர்.
இதனிடையே, செப்டம்பர் 22 இல் லேசாக நினைவு திரும்பிய போது கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாக அப்பெண் வாக்குமூலம் அளித்திருந்தார். இதற்கு முன்பாக உபி போலீஸ் சம்பவத்திற்கான எந்த தடயங்களையும் உடனடியாக கைப்பற்றவில்லை.
இதனால், 96 மணி நேரத்திற்கு முன்பாக கைப்பற்ற வேண்டிய பாலியல் புகார் மீதான தடயங்களும் 11 நாட்களுக்கு பின்னரே எடுக்கப்பட்டன. பலியான பெண்ணின் உடலும் பலவந்தமாக போலீஸாரால் எரிக்கப்பட்டு விட்டது.
பெண்களுக்கானப் புகார்களின் விசாரணைக் குழுவில் ஒரு பெண் கூட அமர்த்தப்படவில்லை. இதற்கு துவக்கம் முதல் அப்பெண்ணுக்கான சம்பவத்தை பலாத்கார வழக்காக உ.பி போலீஸார் கருதாதது காரணமானது.
எனவே, உபி போலீஸாரின் இந்த பெரும் தவறுகள் சிபிஐயின் முன்பாக பெரும் சவாகி உள்ளன. இவற்றை சரிசெய்து விசாரணையை தொடரும் பொருட்டு சிபிஐ தீவிரம் காட்டி வருகிறது.
இதற்காக, சிறையில் உள்ள நான்கு குற்றவாளிகளையும் நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளது. இவர்களுடன் பலியான பெண்ணின் குடும்பத்தாரையும் ஒன்றாக வைத்தும் சிபிஐ விசாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிஎஸ்பி அந்தஸ்து கொண்ட சிபிஐ அதிகாரியான சீமா பஹுஜா இவ்வழக்கின் பொறுப்பை ஏற்றுள்ளார். இவரது தலைமையில் நேற்று மாலை சிபிஐ விசாரணை குழு ஹாத்ரஸ் அடைந்துள்ளது.
இந்நிலையில், உபியின் அலகாபாத் உயர் நீதிமன்ற லக்னோ அமர்வில் இன்று மதியம் 2.30 மணிக்கு ஹாத்ரஸ் வழக்கு விசாரணைக்கு வருகிறது. இதில் ஹாத்ரஸ் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளருடன், பலியான பெண்ணின் தாய் மற்றும் சகோதரரும் ஆஜராக உள்ளனர்.
இவர்களை ஒருநாள் முன்னதாக ஞாயிற்றுக்கிழமை இரவே லக்னோ அழைத்து செல்ல ஹாத்ரஸ் போலீஸார் விரும்பினார். ஆனால் இரவுப்பயணம் தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதால் இரவுப் பயணம் செய்ய முடியாது என அக்குடும்பத்தார் மறுத்து இன்று விடியலில் கிளம்பி சென்றுள்ளனர்.