விவசாயிகளுக்கு எதிரானது என்று கருதப்படும் விவசாயச்சட்டங்களை எதிர்த்து காங்கிரஸ் கட்சி உள்ளிட்டவை மேற்கொண்டு வரும் பிரச்சாரங்களை முறியடிக்கவும், பிரதமர் மோடியின் புகழைப் பரப்பவும் பாஜக 8 மத்திய அமைச்சர்களைக் களமிறக்குகிறது.
அக்.13 முதல் அக்டோபர் 20 வரை 8 மத்திய அமைச்சர்கள் பஞ்சாபுக்கு வருகை தந்து விவசாயிகள், விவசாய அமைப்புகள், வேளாண் விஞ்ஞானிகள், விவசாயத் தலைவர்கள், கமிஷன் ஏஜெண்ட்கள் ஆகியோரிடம் பேசவுள்ளனர்.
விவசாயச்சட்டத்திருத்தங்களில் மீதான சந்தேகங்களை இந்த 8 அமைச்சர்களும் தெளிவுபடுத்துவார்கள் என்று பாஜக கட்சி வட்டாரங்கள் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளன.
இந்த 8 அமைச்சர்கள் யார் யாரெனில் ஹர்திப் சிங் பூரி, கைலாஷ் சவுத்ரி, ஸ்மிருதி இரானி, அனுராக் தாக்கூர், சஞ்சீவ் பல்யான், சோம் பிரகாஷ், கஜேந்திர சிங் ஷெகாவத், மற்றும் ஜிதேந்திரா சிங் ஆகியோர்களாவார்கள்.
இந்த அமைச்சர்கள் அமிர்தசரஸிலிருந்து மொஹாலிக்குச் செல்கின்றனர். அக்டோபர் 13ம் தேதியன்று அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அமிர்தசரஸில் விவசாயிகளிடம் பேசுகிறார்.
காங்கிரஸ் பிரச்சாரத்துக்கு எதிராக கதையாடலை இவர்கள் மாற்றியமைக்க பணிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் பிரச்சாரம் செய்யவிருப்பதை உறுதி செய்த பாஜக தலைவர் தருண் சாக், “இந்த விவசாயச் சட்டங்கள் புரட்சிகரமானது. விவசாயிகள் மீது வரியை விதிப்பதன் மூலம் பெறப்படும் பணத்தை காங்கிரஸார் தட்டிச் செல்ல முடியவில்லை. 7 நட்சத்திர ட்ராக்டர் பயணம் மேற்கொள்பவர்களுக்கு விவசாயிகளின் வலி தெரியாது. மோடி அரசு அவர்களுக்காக சந்தையைத் திறந்து விட்டு அவர்களின் சுதந்திரத்தை உறுதி செய்துள்ளது” என்றார்.