ஸ்ரீநகரின் ராம்பாக் பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் இன்று காலை பயங்கரவாதிகள் நடமாட்டம் குறித்த தகவல் கிடைத்ததை அடுத்து மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) ராம்பாக் என்ற பகுதிக்கு விரைந்தது. அங்கு இன்று அதிகாலையிலிருந்தே தொடர்ந்து தேடுதல் வேட்டையில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்
இதுகுறித்து காஷ்மீர் காவல்துறை தலைவர் விஜய்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் நடமாட்டம் குறித்த தகவல் கிடைத்ததை அடுத்து காவல்துறை, மத்திய ரிசர்வ் போலீஸ் (சிஆர்பிஎஃப்) படையினர் இன்று அதிகாலையில் ராம்பாக் என்ற பகுதிக்கு விரைந்தனர். அதைத் தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. காவல்துறை மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் (சிஆர்பிஎஃப்) தொடர்ந்து தீவிரவாதிகளுடன் மோதலில் ஈடுபட்டனர்.
என்கவுன்ட்டரின்போது இன்று காலை சைஃபுலா என்ற பாகிஸ்தான் பயங்கரவாதியும், லஷ்கர்- இ-தொய்பாவைச் சேர்ந்த உள்ளூர் பயங்கரவாதியும் சுட்டுக் கொல்லப்பட்டனர். செப்டம்பர் மாதம் சிஆர்பிஎஃப் ஊழியர்கள் மீதான தாக்குதலிலும், நோவ்காமில் அண்மையில் சிஆர்பிஎஃப் மீதான தாக்குதலிலும் 2 பேர் உயிரிழந்தனர். இவ்விரு சம்பவங்களிலும் சைஃபுலா ஈடுபட்டிருந்தார்''.
இவ்வாறு விஜயகுமார் தெரிவித்தார்.
தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.