சாமோலி: ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் மிகவும் அரிதான பிரம்ம கமலம் பூ மலரும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
இமயமலையின் ஒரு சில சிகரங்களில் மட்டுமே காணப்படும் மலர் பிரம்மக் கமலம் ஆகும். ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் தன்மைக் கொண்ட இந்த மலர், பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, சூரியன் அஸ்தமனத்துக்கு பிறகு பூக்கும் ஒரே மலர் என்ற பெருமையையும் இது பெற்றிருக்கிறது. எனவே, இந்தப் பூக்களை பார்ப்பது மிகவும் அரிது.
இந்நிலையில், உத்தராகண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் உள்ள ஒரு பனி படர்ந்த பள்ளத்தாக்கில் இந்த பிரம்மக் கமலம் பூக்கும் அரிய காட்சியை ஒருவர் தனது கேமராவில் பதிவு செய்துள்ளார். சுமார் 8 அங்குலத்துக்கு அந்த மலர்கள் தங்கள் இதழ்களை விரிக்கும் காட்சி, காண்பவர்களை பரவசப்படுத்தி வருகிறது.
இந்த வீடியோ பதிவிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கானோரால் பார்க்கப்பட்டும் பகிரப்பட்டும் வருகிறது.