இந்தியாவில் உள்ள பிரிட்டிஷ் கமிஷன் ஆண்டுதோறும், ‘ஹை கமிஷனர் பார் எ டே’ (ஒருநாள் ஹை கமிஷனர்) என்றதலைப்பில் போட்டி நடத்துகிறது. இதில் இந்தியாவைச் சேர்ந்த 18 வயது முதல் 23 வயதுவரை உள்ள பெண்கள் பங்கேற்கலாம். சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 11-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு கடந்த 2017-ம் ஆண்டு முதல் இந்தப் போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
உலகம் முழுவதும் பெண்களுக்கு அதிகாரம் அளித்தல்மற்றும் பெண்கள் சந்திக்கும் சவால்களை வெளிச்சம் போட்டு காட்டுதல் ஆகியவற்றை நோக்கமாக கொண்டு இந்தப் போட்டி நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு நடத்தப்பட்ட போட்டியில், டெல்லியைச் சேர்ந்த சைதன்யா வெங்கடேஸ்வரன் என்ற 18 வயது இளம்பெண் வெற்றி பெற்றார். இதையடுத்து, அவர் கடந்த புதன்கிழமை டெல்லியில் உள்ள இந்தியாவுக்கான பிரிட்டிஷ் ஹை கமிஷனர் அலுவலகத்தில் மிக உயரிய பதவியான பிரிட்டிஷ் ஹை கமிஷனராகப் பதவி வகித்து சாதனை படைத்தார்.
பிரிட்டிஷ் ஹை கமிஷனராக ஒரு நாள் பதவி வகித்த அந்த நாளில், அலுவலகத்தில் உள்ள மற்ற துறைகளுக்கு பணிகளை ஒதுக்கி தந்தார். மூத்த பெண் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பத்திரிகையாளர்களைச் சந்தித்து உலகம் முழுவதும் பெண்கள் சந்திக்கும் சவால்கள், அவற்றுக்கான தீர்வு குறித்து விவாதித்தார்.
துணை பிரிட்டிஷ் ஹை கமிஷனர் ஜேன் தாம்சன் கூறும்போது, ‘‘மிகச்சிறந்து விளங்கும் இளம்பெண்களுக்கு இந்த ஆண்டு ஒரு அரிய வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் போட்டியாக இருந்தது. இதில் 215 பேர் பங்கேற்றனர். அவர்களில் சைதன்யா வெற்றி பெற்றார். ஒரு நாள் ஹை கமிஷனர் சைதன்யாவிடம் எனது பொறுப்புகளை ஒப்படைக்கும் போது மிகவும் சிலிர்ப்பாக இருந்தது. ஆனால்,அந்த ஒரு நாளில் சைதன்யாவின் செயல்பாடுகள் என்னை மிகவும் கவர்ந்தன. அடுத்து சைதன்யா எதை சாதிக்க போகிறார் என்று ஆவலுடன் காத்திருக்கிறேன்’’ என்றார்.