இந்தியா

ராய்கட் வனப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட மண்டை ஓடு, எலும்புகள் ஷீனா போரா உடல் அமைப்புடன் ஒன்றி போகின்றன: புகைப்பட தொழில்நுட்பத்தின் மூலம் உறுதி

பிடிஐ

ராய்கட் வனப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட மண்டை ஓடு, எலும்புகள் ஷீனா போராவின் உடல் அமைப்புடன் ஒத்துப் போவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது போலீஸார் விசாரணையில் முக்கிய திருப்பமாகக் கருதப்படுகிறது.

கொல்லப்பட்ட ஷீனா போராவின் மண்டை ஓடு மற்றும் சில எலும்புகளை மும்பை அருகே உள்ள ராய்கட் வனப் பகுதியில் போலீஸார் கண்டெடுத்தனர். அவற்றை தடயவியல் சோதனைக்கு அனுப்பினர். பின்னர் அதே இடத்தில் எலும்புகளைப் போலீஸார் புதைத்து விட்டனர். மேலும், அடையாளம் தெரியாத சடலம் என்று போலீஸார் கூறிவிட்டனர்.

இந்நிலையில்தான் இந்திராணியின் கார் டிரைவர் ஷ்யாம் ராய், ஷீனா போரா கொலை குறித்து போலீஸில் தகவல் தெரிவித்தார். அதன்பின், உடலை புதைத்த இடத்தை அவர் அடையாளம் காட்டினார். ராய்கட் வனப்பகுதியில் எலும்புகள் புதைக்கப்பட்டிருந்த இடத்தைதான் அவரும் காட்டினார். அதனால் அவை ஷீனா போராவின் மண்டை ஓடு, எலும்புகள்தானா என்பதை அறிய, தெற்கு மும்பையில் அக்ரிபடா பகுதியில் உள்ள பி.ஓய்.எல்.நாயர் மருத்துவமனையின் தடய அறிவியல் துறைக்கு அனுப்பினர்.

அங்கு தடயவியல் நிபுணர்கள் ‘டிஜிட்டல் பேஷியல் சூப்பர்இம்பொசிஷன்’ தொழில்நுட்பம் மூலம் மண்டை ஓட்டையும், ஷீனா போராவின் புகைப்படத்தையும் பொருத்தி பார்த்து ஆய்வு செய்தனர். அதில், மண்டை ஓடும் ஷீனா போராவின் முகமும் கச்சிதமாக பொருந்தி வந்துள்ளது. எலும்புகளின் வயது குறித்து மருத்துவமனையில் ஆய்வு செய்தபோது, அவை பெண்ணுடைய எலும்புகள் என்றும் 20 முதல் 25 வயதுக்குட்பட்ட பெண்ணாக இருக்கலாம் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஷீனா போரா கொலை செய்யப்பட்டபோது அவருக்கு வயது 24.

மேலும், எலும்புகளை ஆய்வு செய்தபோது, அவற்றுக்கு உரியவரின் உயரம் 154 செ.மீ. இருந்து 160 செ.மீ.க்குள் இருக்கும். 5 ஆண்டுகளுக்குள் கொலை நடந்திருக்கலாம் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். இவை எல்லாம் ஷீனாவின் வயது, உயரம், கொலை நடந்த ஆண்டுடன் பொருந்தி உள்ளன. இவற்றை எல்லாம்விட தற்போது மரபணு பரிசோதனை முடிவுக்காகப் போலீஸார் காத்திருக்கின்றனர். அது மிகமிக முக்கியமானது. எனினும், தடயவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ள விவரங்கள் கொலையை நிரூபிக்க உதவும் என்று போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

‘சூப்பர் இம்போஸ்' சோதனை தோல்வி: நிபுணர் கருத்து

சென்னையைச் சேர்ந்த தடயவியல் நிபுணர் வரதராஜன் கூறியதாவது:

1990-ம் ஆண்டு சேலம் மாவட்டத்தில் பாண்டியம்மாள் என்ற பெண் காணாமல் போக, அடுத்த சில நாட்களில் அருகே இருந்த குளத்தில் அடையாளம் தெரியாத ஒரு பெண்ணின் உடல் மிதந்தது. பிரேதப் பரிசோதனை அறிக்கையில் வயது, உயரம் அனைத்தும் பாண்டியம்மாளுக்கு இணையாகவே இருந்தது. இதையடுத்து அறிவியல் பூர்வமாக நிரூபிக்க 'சூப்பர் இம்போஸ்' முறையில் சோதனை நடத்தப்பட்டு அது பாண்டியம்மாளின் உடல்தான் என்று அறிக்கை கொடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து பாண்டியம்மாளை கொலை செய்ததாக அவரது கணவர் உட்பட சிலர் கைது செய்யப்பட்டனர். வழக்கு நடந்துகொண்டிருந்த நிலையில் பாண்டியம்மாள் திடீரென உயிருடன் வந்தார். சூப்பர் இம்போஸ் சோதனை நம்பகத்தன்மை இல்லாதது என்பதற்கு இந்த வழக்கு சிறந்த உதாரணம்.

இறந்தவரின் மண்டை ஓடும், அவர் உயிருடன் இருக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் ஸ்கேன் செய்து, நெற்றி, கண், மூக்கு, வாய், கன்னம், தாடை, பற்கள் போன்ற பாகங்கள் சரியாக பொருந்துகிறதா என்பதை சரிபார்ப்பதுதான் சூப்பர் இம்போஸ் சோதனை. ஆனால் இது ஒரு தோல்வியடைந்த அறிவியல் சோதனை' என்றார்.

SCROLL FOR NEXT